79. | ஆகா அளபெடை அணையினும் அம்முறை | | துள்ளல் தோஒறும் துலக்கவல் லானேல் | | அஃதும்ஓர் வியப்புஎன்று அறைவார் சிலரே. |
|
(வண்ணத்தியல்பு நூலில் வண்ணப்பாடலுக்கு ஆகாது என்று) விலக்கப்பட்ட அளபெடை வந்திருந்தாலும்-அதே மாதிரி அளபெடை ஒவ்வொரு துள்ளலிலும் வரும்படி அமைக்கப் பட்டிருந்தால் அதனையும் ஒரு சிறப்பாகச் சிலர்விரும்பி ஏற்பர் என்றவாறு. |
அளபெடையை விலக்கிய நூற்பா முன்னே காட்டப்பட்டது. துள்ளல்தோறும் அளபெடை வந்தால் அதுவும் ஒரு முறையான அமைப்பாக ஆகிவிடுவதால் வடிவொழுங்கு பெற்று வழுவமைதியாக ஏற்கத் தக்கதாகிறது. அவ்வாறு அமைப்பதன் அருமை நோக்கி “வல்லானேல்” என்றார். எனினும் இவ்வாறு ஏற்பவர் சிலரே என்ற தால்பலர் விரும்பார் எனக் குறிப்பால் உணர்த்தப்பட்டது. (478) |
80. | அந்நூல் ஒப்பாக் குற்றம்நான் கினுக்குள் | | இந்நூல் மூன்றுஇசைந்து இருப்பதுஎன் என்பார் | | உற்று நோக்கும் உணர்வுஉறா தவரே, |
|
வண்ணத்தியல்பு நூல் ஏற்றுக்கொள்ளாத மதுரம் குன்றல் குழிப்புச் சிதைவு, கொடுந்தமிழ்ப் புணர்ப்பு, அளபெடைச் சேர்க்கை ஆகிய நான்கு குற்றங்களுள் இந்நூல் குழிப்புச் சிதைவு நீங்கலாக மற்றைய மூன்றையும் தழுவி ஏற்றுக் கொண்டுள்ளது ஏன் என வினவுவோர் ஆராய்ந்து நோக்கும் நுண்ணறிவற்றவரே ஆவர் என்றவாறு. |
கொடுந்தமிழ்ப் புணர்ச்சி 77 ஆம் நூற்பாவிலும், மதுரம் குன்றுதல் 78 ஆம் நூற்பாவிலும், அளபெடை அணைதல் 79 ஆம் நூற்பாவிலும் ஏகதேசம் தழுவி, ஏற்றுக் கொள்ளப்பட்டன. எனினும் அந்தந்த நூற்பாவிலேயே இக்குற்றங்கள் வரக்கூடாதென்று குறிப்பாலும் உணர்த்தப்பட்டது. இதனை உணராதோரே இரு நூல்களும் தம்முள் முரணுகின்றன என்பர். இங்கும் இவை சிறந்ததாக ஏற்கப்படவில்லை |