“குராங்கழல் சூட்டிக் கவுமாரர் தம்மொடு கூட்டி அப்பால் |
நிராஞ்சன நின்மல ஞானானு பூதி நிறைத்தருள்வாய் |
கராங்குலி கொண்டு மலரோன்றன் சென்னி கவர்ந்துவக்கும் |
புராந்தகன் பெற்ற மகனே! குமார புரிக்கந்தனே”1 |
இக்கவியில் எதுகை “தனாந்தன” என்னும் சந்தக் குழிப்பில் அமைந்து வண்ண எதுகை ஆயிற்று. இவ்வாறே அபிராமி அந்தாதியில் வரும் சின்னஞ்சிறி, பென்னம்பெரி, கன்னங்கரி, தன்னந்தனி என்ற எதுகை “தன்னந்தன” என்ற சந்தத்தில் வந்த வண்ணஎதுகையாம். |
வண்ணப்பாடல்களில் வரும் எதுகைகள் வண்ணம்பெற்றே வருமாதலின் அங்கே இதனைக் கொள்ளலாகாது. வண்ணமல்லாத பாடலில் இவ்வாறு வருவதே வண்ணவெதுகையாம். (503) |
105. | இவ்வகை எதுகையில் யாதும் இல்லெனில் | | செவ்விய கவிகளும் சீர்அழிவு உறுமே. |
|
சிதையாத்தொடை, சிதைவுறுதொடை, ஓசைத்தொடை, இனத்தொடை, அலங்காரத்தொடை, வண்ணத்தொடை என ஆறுவகையாகக்கூறப்பட்ட இவ்வெதுகை வகைகளில் ஏதாவது ஒன்று இடம் பெறாவிட்டால் சிறந்த பொருள்நயம் மிக்க பாடலாயினும் அது தன் தகுதியை இழக்கும் என்றவாறு. (504) |
106. | எதுகை இயல்பினை இம்மட்டு அடக்கி | | எவ்வகைக் கவிகளும் நால்வகைத் தாமெனக் | | கூறும்அம் முறையின் குறிப்புரைக் குதுமே. |
|
எதுகை இலக்கணத்தை இத்துடன் நிறைவுசெய்து எல்லாப் பாடல்களும் ஆசு முதலிய நான்கனுள் அடங்கும் எனக் கூறும் அம்முறையைக் குறித்துக் கூறுவாம் என்றவாறு. |
|