யாப்பிலக்கணம்356
தண்ணென்ற சோலைகள் மிக்க பாண்டி நாட்டுக் குலசேகரன் இயற்றிய மதுராம்பிகைமாலை போன்ற பாக்கள் மதுரகவியாகும் என்றவாறு.
“சொல்லும் பொருளும் சுவைபட நிறீஇச் செல்வுழி தொடையும் விகற்பமும் செறீஇ உள்ளத்து உள்ளே கொள்ளும் அமுதுஎனத் தன்மை உவமை பின்வரு பெற்றியின் உருவகம் முதல் உற்று ஓசை பொலியப் பாடுதல் மதுர கவியெனப் படுமே”1 என இதன் விளக்கம் கூறப்படுகிறது.
குலசேகரனால் இயற்றப்பெற்ற மாலை மதுராபுரி மாலை, மதுராம்பிகை மாலை என்று வழங்கப்படுகிறது. இது போல்வன நிதானமாகச் சிந்தித்துச் செய்யப்படும் இலக்கிய எழில் நிறைந்த சிற்றிலக்கியங்கள் ஆதலின் இனிமை நோக்கி மதுரகவி எனப்பட்டன.
(507)
109.கொங்குவாழ் மன்னன் கொடுத்த கொடுவாள்
 அருணையூர்ப் புரவலன் அரண்மனை சேரத்
 திகழ்ந்தநூல் ஆதிய சித்திர கவியே.
வக்கபாகை ஆட்கொண்டானால் வில்லிபுத்தூராருக்குக் கொடுக்கப்பட்ட குறுவாள், திருவண்ணாமலை மன்னனாகிய பிரபுடதேவராயனின் அரண்மனையிற் சென்றடையும்படி பாடப்பட்ட அருணகிரிநாதரின் “கந்தரந்தாதி” போன்றவை சித்திர கவிகளாகும் என்றவாறு.
வில்லிபுத்தூராழ்வார் தம்மிடம் வாதுபுரிந்து வண்ணத்தில் தோற்ற புலவர்களின் செவிகளை அரிந்து விடுவாராம். இதற்காகவே அவர் ஆட்கொண்டானிடமிருந்து ஒரு வாளை வாங்கி வைத்திருந்தாராம். (புலவர் புராணம் - வில்லிபுத்தூரார் சருக்கம் 22) இவருக்கும் அருணகிரிநாதருக்கும் அருணையில் வாதப்போர் மூண்டது. அருணகிரிநாதரின் கந்தர் அந்தாதி என்ற யமக அந்தாதியில் தகர ஒருவருக்கப்பாவாக அமைந்த ஒரு பாடலுக்கு வில்லியால் உரை கூற இயலவில்லை. அவர்