நூல், பிரபந்தம், காவியம் என்று மூவகையாகப் பிரித்துக் கூறப்படும் பனுவல்களைக் கூர்ந்து ஆராய்ந்தால் அவைகளும் மக்கட் கூட்டத்தை போலவே விளங்குகின்ற தன்மை தெளிவாகும். எனவே ஒரு நூல் இன்ன குணத்தை உடையது, இன்ன பெயருள் அடங்கும் என்று முற்றிலுமாகக் கூறிவிட முடியாது. எனினும் இலக்கணம் கூறவேண்டிய இந்நூலின் கடப்பாடு பற்றி ஓரளவு கூறுவாம் என்றவாறு. | மக்களில் ஆண்களிடத்திலும் சில மகடூஉக் குணங்களும், பெண்களிடத்திலும் சில ஆடூஉக் குணங்களும் விரவி இருக்கக் காணலாம். ஒருவரிடத்திலேயேஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று விஞ்சி நிற்பதும் இயல்பே. இதைப்போலவே பனுவல்களிலும் பயன்பாடும், சுவைப்பாடும் கலந்தே இருக்கும். எனவேதான் பனுவற்றொகைக்கு மனுத்திரளை உவமையாக்கினார். | மற்றொன்று, மனிதன் சத்துவம், ராஜஸம், தாமஸம் என்ற முக்குண வயப்பட்டவன். அவனிடம் மூன்றும் கலந்தும், சிற்சில வேளைகளில் ஏதோ ஒன்று மேலோங்கியும் விளங்கும். எந்த ஒரு மனிதனையும் ஒரே குணமுள்ளவன் எனக்கூற முடியாது. இவ்வாறே நூல்களும் சில இடங்களில் இலக்கியச் சுவையை விட்டுவிட்டு அறிவுக்குரிய செய்திகளைத்தெரிவிக்கும்; சில இடங்களில் பொருளைப்பற்றிக் கவலையின்றி இலக்கியச் சுவையை மட்டும் வழங்கும்; வேறுசில இடங்களில் இலக்கியச் சுவையோடு சேர்த்து செய்திகளையும் தரும். இதனால் எல்லாப் பனுவலிலும் நூல், பிரபந்தம், காவியம் ஆகிய மூன்றன் கூறுகளும் விரவியே கிடக்கும். எனவே எந்தப் பனுவலையும் இது இத்தன்மையை மட்டுமே உடையது எனப்பிரித்துக் கூறிவிட முடியாது. “மனிதரில் மன்னிய குணங்களை மானப்பனுவ லிடத்தும் படர்ந்தவை விரவுமே”. இஃது உரைச் சூத்திரம். இதில் குணங்கள் என்றது ஆடூஉ மகடூஉக் குணங்களுக்கும், முக்குணங்களுக்கும் பொதுவாகும். (514) | 116. | அறம்பொருள் இன்பம் வீட்டு நெறிஎனும் | | நான்கும் பனுவற் றொகைக்குஎலாம் தாயும் | | தந்தையும் குருவும் தனிப்பெருந் தெய்வமும் | | ஆம்எனும் துணிவுறல் அறவோர்க்கு அழகே. |
|
|
|