அறுவகையிலக்கணம்365
ஆகியவர்களைப் போற்றிப் பாடப்படும் பனுவல்கள் யாவும் பிரபந்தம் எனப் பெயர்பெறும் என்றவாறு.
ஒரு பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து இயற்றப்படுவது பிரபந்தம் என்றாராயிற்று.
(517)
119.வரை,நதி நகர்,நாடு ஆதியின் வளமும்,
 தெய்வச் செயலும், திறல்மிகு போரும்,
 செங்கோற் சிறப்பும், சீரியர் தன்மையும்
 அனையன போலும் அமைவுஎலாம் பெருக்கிக்
 கழறுதல் புராணமும் காவ்யமும் ஆமே.
மலை, ஆறு, ஊர், நாடு முதலியனவற்றின் வளப்பத்தையும், இறைவனின் திருவருளாடல்களையும், வன்மை மிகுந்தவர்களுக்கிடையே நடைபெறும் போர்களையும், மன்னனின் அரசாட்சிச் சிறப்பையும், சான்றோர்களின் இயல்புகளையும் இன்னோரன்ன அமைப்புகள் அனைத்தையும் நன்கு விரித்து விளக்கமாகக் கூறுதல் புராணம் எனவும், காவியம் எனவும் பெயர் பெறும் என்றவாறு.
அனையன போலும் என்றதனானே இருசுடர்த்தோற்றம், நன்மணம் புணர்தல் முதலாகக் கூறப்படுகின்ற பெருங்காப்பிய உறுப்புகள் அனைத்துங் கொள்க.
(518)
120.பனுவலின் முகத்துத் திலகம் போல்வது
 பாயிரம் ஆம்எனப் பகரத் தகுமே.
பாயிரம் என்பது எல்லாப் பனுவல்களுக்கும் முகத்தில் இடப்பெறும் பொட்டைப்போல் எழில் தருவதாகும் எனலாம் என்றவாறு.
“மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
 ஆடமைதோள் நல்லார்க்கு அணியும்போல்-நாடிமுன்
 ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
 பெய்துரையா வைத்தார் பெரிது.”1
என்றார் பவணந்தியாரும்.
(519)