யாப்பிலக்கணம்366
121.பனுவற் காரன் பகர்பொதுப் பாயிரம்
 தெய்வக் காப்பும், கொள்வார் செயலும்,
 நுவன்றகா ரணமும், பயனொடு பிறவுமே.
நூலாசிரியனால் இயற்றப்படும் பொதுப்பாயிரம் கடவுள் வாழ்த்து, அதிகாரி இலக்கணம், நூல் செய்த காரணம், நூற்பயன் ஆகியவற்றோடு பிற செய்திகளையும் கொண்டிருக்கும் என்றவாறு.
பிற என்றதனால் வழி, நூற்பெயர், யாப்பு போன்றவைகளையும் அமைத்துக் கொள்க.
(520)
122.ஆக்கியோன் துணிந்தோன் அல்லான் என்னில்
 காதுறக் கேட்டுக் களித்தோன் கழறும்
 சிறப்புப் பாயிரம் திகழ்தரு பனுவற்
 செய்தோன் பெயரும் சேர்த்தநல் அரங்கும்
 அதன்புகழ் ஆதியும் ஆம்எனத் தகுமே.
நூலாசிரியன் தன் நூற் சிறப்பைத் தானே எடுத்துக் கூறத் தயங்கிப் பாயிரம் பாடாவிடில் அந்நூல் அரங்கேற்றத்தைக் கேட்டு மகிழ்ந்த வேறு ஒருவன் சிறப்புப் பாயிரம் இயற்றலாம். அச்சிறப்புப் பாயிரத்தில் நூலாசிரியன் பெயர், அரங்கேற்றப்பட்ட களம், அந்நூற் சிறப்பு ஆகியன கூறப்படவேண்டும் என்றவாறு.
“தோன்றாதோற்றித் துறைபல முடிப்பினும் தான்தற் புகழ்தல் தகுதி யன்றே”1 ஆதலின் சிலர் பாயிரங் கூறத் துணியார். நூலைச் சுவைத்தவன் சிறப்புப் பாயிரம் இயற்ற வேண்டுமென்பது இவருடைய கொள்கை. “தன்னா சிரியன் தன்னொடு கற்றோன் தன்மாணாக்கன் தகும்உரைகாரன் என்று இன்னோர்”2 நூலையும் ஆசிரியரையும் நன்கு அறிந்திருப்பர் ஆதலின் அவர்களைச் சிறப்புப் பாயிரம் பாடுதற்குரியாராக நன்னூல் கூறுகிறது.