அணியிலக்கணம்376
கணிஉரு ஆகிய முருகன் என்றதனானே இயல்பான ஒரு கருத்து கவிஞன் நினைந்து மாற்றி வேறு வகையாகக் கூறுவதே அணி எனப்படும் என்பதுவும், காமர் முருகன் என்றதனானே அது மொழிக்கு எழில் தருவது ஆகும் என்பதுவும் பெறப்பட்டன. பழிச்சல் என்பது உபலக்கணமாக மூவகை வணக்கத்தையும் குறித்து நின்றது. அடுத்த நூற்பா இவ்விலக்கணம் இத்தனை பிரிவுகளை உடையது எனக் கூறுகிறது.
(534)
2.அணிநிலை அளப்பரிது; ஆயினும் உவமை,
 உடைமை, கற்பனை, நிகழ்ச்சி, ஆக்கம்என்று
 ஐவகை வாய்பாடு அறைகுதும் அன்றே.
அணிகள் செய்யுட்கண் நிற்கின்ற வகை இத்துணை வகையாம் என ஒருதலையாகக் கூறமுடியாது. எனினும் யாம் அணியை உவமை, உடைமை, கற்பனை, நிகழ்ச்சி, ஆக்கம் என்ற ஐந்து வகையாகப் பகுத்துக்கொண்டு கூறுவாம் என்றவாறு.
அணிநிலை அளப்பரிது என்பதும், உவமையின் ஏற்றமும் முன்பே காட்டப்பட்டன. இவ் வைவகைப் பாகுபாடு பற்றி ஆங்காங்குக் கூறப்படும். இவ்வாறு பகுத்துக்கொண்ட பின்னர் நிறுத்த முறையானே முதலில் உவமை இயல்பு பேசப்படுகிறது.
(535)
1. உவமை இயல்பு
அணியிலக்கணத்தின் முதற்பிரிவாகிய இவ்வியல்பு 41 நூற்பாக்களை உடையது. இவ்விலக்கணம் உவமானம், உவமேயம், பொதுத்தன்மை, உவமஉருபு ஆகிய பகுதிகளைப் பற்றியோ அல்லது விரி, தொகை உவமைகளின் பாகுபாட்டைப் பற்றியோ அல்லது உண்மையுவமை, புகழுவமை, நிந்தையுவமை, விபரீத உவமை, இல்பொருளுவமை, மாலையுவமை முதலான பற்பல உவமைவகைகளைப் பற்றியோ ஒன்றும் கூறுவதில்லை.