அணியிலக்கணம்386
வில்லைப்போன்று வளைந்த புருவங்கள், சந்திரனையும் தாமரையையும் நிகர்த்த அழகிய வதனம் என்னும் இரண்டும் ஆடவர் மகளிர் என்னும் இருபாலார்க்கும் பொதுவானவையாம் என்றவாறு.
இங்கு விது என்றது முழுத்திங்களை.
(553)
21.காகமூக்கு என்னக் கவின்தரு புருவமும்
 போர்விடைக் கண்ணும் புருடர்க்கு உரியவே.
காக்கையின் அலகைப்போன்று விளங்கும் புருவங்களும், போர்க்குணமுடையகாளையின் கண்களைப் போன்ற விழிகளும் ஆடவர்க்குச் சிறப்பாக உரியனவாகும் என்றவாறு.
முன் நூற்பாவில் வில்லைப் புருவத்திற்கு உவமை கூறியது வளைவுபற்றி, இந் நூற்பாவில் பருமை, நுனியிற் செல்லச் செல்லச் சிறுத்தல், ஒளி ஆகியவை பற்றிக் காகத்தின் அலகுடன் நிகராக்கப்படுகிறது.
(554)
22.கரும்பொடு வாள்எனக் கவின்தரு புருவமும்
 கணைவேல், உற்பலம், கயல்பொரு கண்ணும்
 கோதையர்க்கு அன்றிக் கூறஒண் ணாதே,
மாரனின் கரும்புவில்லைப்போன்றும், வாளைப்போன்றும் விளங்குகின்ற புருவங்கள் எனவும், அம்பு, வேலாயுதம், குவளைமலர், மீன் இவைகளைப் போன்ற விழிகள் எனவும் பெண்களுக்குத்தான் கூறலாமேயன்றி ஆடவர்க்குக் கூறலாகாது என்றவாறு.
கரும்பு ஆகுபெயராக மன்மதனின் வில்லை உணர்த்திற்று. முன்னே 20 ஆம் நூற்பாவில் பொதுவாக வில்லை இருபாலார்க்கும் கூறிய ஆசிரியர் இங்கு மெலிந்த கரும்பு வில்லை மகளிர் புருவத்திற்குச சிறப்புவமையாகக் கூறுகிறார்.
(555)
23.பெண்கொடி நாசியின் பேர்எழிற்கு இணைஎனச்
 சண்பக மலரையும் சாற்றுநர் சிலரே.