அறுவகையிலக்கணம்391
கல்லாகிய சிந்தாமணியும், தெய்வலோகப் பசுவாகிய காமதேனுவும், கடவுளும் அன்றாடம் இரவலர்க்கு மறுக்காமல் வழங்கும் வள்ளல்களுடைய சிவந்த கரங்களுக்கு உவமை கூறத்தக்கன என்றவாறு.
முன் 17ஆம் நூற்பாவில் கூறப்பட்டது வள்ளலுக்கு உவமை. இது அவன் கைகளுக்கு உவமை. இந்நூற்பாவில் தெய்வம் என்பதற்கு ஆகூழ் என்றும் பொருள் கொள்வதற் கேற்பக் கடவுள் என்றுரைக்கப்பட்டது.
(568)
36.சிறுகீரை வித்துஉறு செம்பொற் றட்டமும்,
 தேர்த்தட்டும் வாவியும் தேன்கூடும் மின்னார்
 கடிதடத்து உவமையாக் கழறினர் முன்னோர்.
சிறுகீரை விதைகள் பரப்பப்பெற்ற பொன்னாலாகிய தட்டத்தையும், தேரின் பீடத்தையும், குளத்தையும், தேன் கூட்டையும் பருவப் பெண்களின் நிதம்பத்திற்கு நிகராகப் பழங்காலப் புலவர்கள் கூறியுள்ளனர் என்றவாறு.
இந்நூற்பாவில் மின்னார் என விதந்து கூறியது இளம் பெண் குழவிகளையும் முதுமகளிரையும் நீக்கிப் பருவமகளிரை மட்டும் சுட்டிக்காட்டவாம்.
(569)
37.சீயம், நூல், உடுக்கை ஆம்எனத் திகழ்இடைக்
 காரிகை இருக்கை களிற்றின் கும்பம்
 போலும் என்றும் புகன்றனர் புலவோர்.
சிங்கத்தின் இடுப்பு, நூலின இழை, உடுக்கையின் நடுப்பகுதி ஆகியனவற்றை நிகர்த்த இடையினை உடையாளாகிய மங்கையின் புட்டங்கள் யானையின் மத்தகங்களைப் போன்று இருக்கும் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர் என்றவாறு.
இந்நூற்பாவில் இடை, புட்டம் ஆகிய இரண்டிற்கும் உவமை கூறப்பட்டது. என்றும் என்பதிலுள்ள உம்மையை இருக்கையோடு கூட்டுக. நகில்களே அன்றி இருக்கையும் என்பது பொருள்.
(570)