அறுவகையிலக்கணம்393
மரபு பற்றி அவ்வாறே கூறினார். முன்னர் அகப்பொருள் உறுப்பியல்பிலும் இந்த முறையே பின்பற்றப்பட்டது.
(571)
39.ஒளிர்இழை மடவார் உவமையிற் சிற்சில
 அகப்பொருட் பகுதியில் அறைந்தனம் அன்றே.
ஒளிவீசுகின்ற அணிகலன்களை அணிந்த மகளிருக்குரிய உவமைகளில் சிலவற்றை முன்னால் அகப்பொருள் பற்றிய பகுதியிலும் கூறியுள்ளோம் என்றவாறு.
(572)
40.செந்தா மரைஎன்று அடிகளைச் செப்பலும்
 கால்உகிர் மதிஎனக் கழறலும் தெய்வத்
 தன்மைக்கு உரித்துஎனத் தழுவுநர் சிலரே.
பாதங்களைச் செந்தாமரைகளாகவும், கால் நகங்களைச் சந்திரனாகவும் உவமித்துக் கூறுதல் கடவுள் தன்மைக்குப் பொருந்துவதாகும் என்று சிற்சில புலவர்கள் மேற்கொள்வர் என்றவாறு.
எனவே மனிதர்க்கு இவ்வுவமை கூடாதென விலக்கப்பட்டது.
(573)
41.ஓந்தி போலும் ஒள்வளை மூக்குஎன்று
 உரைத்தல்ஆதிய ஒருவலும், உணர்வால்
 அட்டமிச் சந்திரன் அகத்திப் பூஇணை
 ஆம்எனல் ஆதிய சேர்த்தலும் அழகே.
ஒளிவீசுகின்ற வளையல்களை அணிந்த கன்னியின் நாசி ஓணானைப்போல் இருக்கிறது என்பதைப் போன்றவற்றை ஆளாமல் அகற்றுதலும், கவிஞன் தான் பார்த்து உணர்ந்த பட்டறிவால் அவள் நெற்றிக்கு எட்டாம் பக்கத் திங்களையும், அகத்திமலரையும் உவமையாகக் கூறுவது போன்ற-இவ்வியல்பில் இதுவரை கூறப்படாத பிறவற்றையும்-சேர்த்துக் கொள்ளலும் சிறப்பாம் என்றவாறு.
உவமானமாகிய அட்டமிச்சந்திரன், அகத்திப்பூ என்பனவற்றைக் கொண்டு உவமேயமாகிய நுதல் வருவிக்கப்பட்டது.