அணியிலக்கணம்400
அகியனவும் மேலும் புலவர்களால் கூறப்பட்டுள்ள பல சிறப்புகளும் தொன்மையான உலகத்தைப் பாதுகாத்து அருளும் திருமாலுக்கு உரியனவாம் என்றவாறு.
பாவலர் வகுத்த பல சிறப்பில் அவதார விசேஷங்கள் மூர்த்தி பேதங்கள் முதலியன அடங்கும்.
(582)
50.விரிகடல் தானையும் வெற்பாம் முலைகளும்
 சோலை ஆய சுரிகுழற் பெருக்கும்
 நீதி குன்றா நெடுவேல் மன்னன்
 ஊராம் முகமும் உயர்புவி மகட்கே.
பரந்த கடலாகிய புடவையும், மலைகளாகிய நகில்களும் மலர்ச் சோலைகளாகிய சுருண்ட கூந்தற்காடும், செங்கோல் தவறாது வலிமையுடன் ஆட்சி புரியும் அரசனுடைய தலை நகராகிய முகமும் சிறந்த பண்புகளை உடைய நிலமடந்தைக்கு உரியனவாம் என்றவாறு.
உரியன என்ற சொல் அவாய் நிலையால் பெறப்பட்டது.
(583)
51.பொன்னொடு நவமணிப் பொலிவும்நெற் போரும்
 அன்னமும் பாலும் அடலும் ஆக்கமும்
 செந்தா மரைமுதற் செப்புவ பிறவும்
 திருமால் மார்புடைச் செய்யவட்கு உரித்தே.
பொன், நவரத்தினம் ஆகியவற்றின் விளக்கமும், நெல் முதலிய தானியக் களஞ்சியமும், பலவகை உணவுப்பொருள்களும், பசுக்கூட்டங்களும், வலிமையும், நாளுக்கு நான் ஏற்படும் முன்னேற்றமும், செங்கமலம் ஆகிய இருக்கையும் இதுபோல் கூறப்படுவன பிறவும் திருமாலின் மார்பில் விளங்குகின்ற திருமகளுக்கு உரியனவாம் என்றவாறு.
நெற்போர் உபலட்சணமாகப் பலவகைத் தானியங்களையும், அன்னம் உபலட்சணமாக இன்றியமையாத்தேவைகளான உடை, உறையுள் ஆகிய மற்ற இரண்டினையும், பால் ஆகுபெயராகப் பசுவையும் குறித்து வந்தன.
(584)