அணியிலக்கணம்402
ஆகிய வண்டுகளின் வரிசை, கரும்புவில், முல்லை, அசோகு, மா, தாமரை, நீலம் ஆகிய ஐந்து மலர்களாகிய அம்புகள், மகிழம்பூ மாலை, மகளிர் கூட்டம் ஆகிய படை, தாழம்பூ ஆகிய வாள் ஆகிய இவையும், இன்னும் சொல்லப்படுபவை பிறவும், அன்னப்புள்ளில் பவனிவரும் இரதியும் மன்மதனுக்கு உரியன என்று புலவர்கள் கூறியுள்ளனர் என்றவாறு.
பிறவும் என்றதால் வசந்தகாலமாகிய தேர், பூஞ்சோலையாகிய படைவீடு, மகரக்கொடி போன்றனவற்றையும் கொள்க.
55.இன்னபல் தேவர் எழில்எலாம் விரிக்கில்
 சிற்பம் ஆகும்; செயல்எலாம் செப்பில்
 புராணம் ஆகும்; ஆதலில் பூவின்
 மாந்தர்க்கு உரிமை வகுக்குதும் சிறிதே.
இவ்வாறாகப் பல தேவர்களின் திருவுருவச் சிறப்புகளை எல்லாம் விளக்கமாகக் கூறினால் இது சிற்ப நூல் ஆகிவிடும். அவ்வாறே அவர்களின் செய்கைகளை எல்லாம் உரைத்தால் புராணமாகப் பெருகிவிடும். எனவே இவைகளை இத்துடன் நிறுத்திக்கொண்டு மண்ணுலக மனிதர்களுக்கு உரியனவற்றை உரைக்கத் தொடங்குவாம் என்றவாறு.
இந்நூற்பாவில் இவைகளை இத்துடன் முடித்துக் கொண்டு என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இதனால் இவ்வியல் நிறைவு செய்யப்பட்டு அடுத்த இயலுக்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்படுகிறது.
(588)
2. மாந்தர் உடைமை இயல்
ஒன்பது நூற்பாக்களானியன்ற இப்பிரிவில் மனிதர்களில் சிற்சிலர்க்கு இவைஇவை உரியன எனக் கூறப்பட்டுள்ளது.
56.காவிக் கொடியும், கவிகையும், கைக்கொளும்10
 நெறிக்குஉள மணிகளை நிறையக் கோத்த
 மாலையும், அன்றி வழிபடும் கடவுட்கு
 உரியசின் னங்களுள் கொளத்தகும் பாற்றும்
 மாதவர்க்கு ஆம்என வகுத்தனர் வல்லோர்.