60. | மேழிக் கொடியொடு வெண்ணிறக் குடையும் | | காவி மாலையும் கங்கைசே யினர்க்கே. |
|
கங்கையின் மைந்தர்கள் எனப்படும் வேளாளர்களுக்கு ஏர் வரையப்பட்ட கொடியும் வெள்ளைக் குடையும் குவளைத்தாரும் உரியனவாகும் என்றவாறு. (593) |
61. | கருநிறக் குடையொடு காக்கலம் பூவும் | | பன்றிநாய் எழுதிய பதாகையும் பச்சூன் | | சேல்பிணம் ஆதிய தின்பார்க்கு ஆமே. |
|
கருந்துணிக்குடை, கருவிளமலர்மாலை பன்றி நாய் இவைகள் எழுதப்பட்ட கொடி ஆகியன பச்சை இறைச்சி, மீன், இறந்த விலங்குகள் முதலியனவற்றைத் தின்னும் இழிந்தவர்களுக்கு உரியனவாம் என்றவாறு. (594) |
62. | வேப்பந் தாரொடு மீன்கொடி வழுதியர் | | கொண்ட முறையே தனித்தனி கொள்வார்க்கு | | அம்முறை கூறுதல் அழகாம் அன்றே. |
|
பாண்டிய மன்னர் வேம்பு மாலையையும், கயற்கொடியையும் சிறப்புச் சின்னங்களாக ஏற்றமைபோலத் தமக்கெனத் தனித்தனிச் சின்னங்களைப் பெற்றவர்களுக்கு அவற்றையே எடுத்துரைப்பது நலமாகும் என்றவாறு. |
இம்முறையில் சோழர்களுக்கு ஆத்திமாலை, புலிக்கொடியும், சேரர்களுக்குப் பனைமாலை, விற்கொடியும் கூறுக. பல்லவர்க்கு விடைக்கொடி, சாளுக்கியருக்குப் பன்றிக்கொடி போன்றவையும் இவற்றுள் அடங்கும். (595) |
63. | தனிவேல், சக்கரம், தவளப் பெருங்குடை | | மன்னருக்கு எல்லாம் வகுப்பதும் தகுமே. |
|
எல்லா வேந்தர்களுக்கும் இணையற்ற வேலாயுதம், ஆணைத்திகிரி, வெண்கொற்றக்குடை என்னும் இம்மூன்றையும் பொதுவாகக் கூறினாலும் அமையும் என்றவாறு. (596) |