அணியிலக்கணம்406
இயற்கை செயற்கைப் பொருள்களின் குணங்களும் நூல்களில் கூறத்தகுந்தன என்று கல்வியிற் சிறந்தவர்கள் உரைத்துள்ளனர் என்றவாறு.
நெறி என்றதனால் சரியை போன்றவற்றையே அன்றிச் சைவம் முதலான சமயநெறிகள் எனினும் அமையும். அல்லது வையத்து வாழ்வாங்கு வாழ்வதற்குரிய நீதிநெறிகள் என்றும் ஆம். யானைநூல், குதிரைநூல், நவமணிகளைப்பற்றிக் கூறும் நூல் போன்றவை பண்பு என்றதில் அடங்கும்.
(599)
67.மலை, நதி, நாடு, நகரம், வாரணம்
 பரி, கொடி, மாலை, ஆணை, தொழில்இவை
 பத்தும் தசாங்கம்; படை, குடை, முரசம்,
 பெயர்முதற் சிற்சில பிறழலும் வாய்பாடு;
 ஆயினும் அத்தொகைக்கு அதிகம் ஆகா;
 பிரபந்த முகப்பில் பேசப் படுபவே.
மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, கொடி, தார், ஆக்கினை, தொழில் ஆகிய பத்தும் தசாங்கம் எனப்படும். இவற்றுள் சிலவற்றை நீக்கிப் படை, குடை, முரசு, பெயர் என்பனவற்றுள் சிலவற்றைச் சேர்த்துக் கூறும் நடைமுறையும் உண்டு. எப்படிக் கூறினாலும் பத்து அங்கங்களுக்குமேல் கூறலாகாது. இத் தசாங்கம் சில பிரபந்தங்களின் முற்பகுதியில் இடம் பெறும் என்றவாறு.
இந்நூற்பா தசாங்கம் யாவை என்பதையும், அவை எங்கு கூறப்படும் என்பதையும் உணர்த்துகிறது. “வரை, ஆறு, நாடு, நகர், ஊர்துரகம், மதகரியே, விரை ஆரும் மாலை, முரசம், பதாகை, மெய்தானை எனும் உரையார் தசாங்கத்தின்”1 என்பது இரத்தினச்சுருக்கம். இதில் இவர் முற்கூறிய பத்துள் ஆக்கினை, தொழில் என்பனவற்றிற்குப் பதிலாகப் படையும், முரசும் இடம்பெற்றன.