அறுவகையிலக்கணம்407
“மறையே யாறே நாடே ஊரே பறையே பரியே களிறே தாரே பெயரே கொடியே என்றிவை தசாங்கம்”1 என்பது பன்னிருபாட்டியல். இதில் இவர் முற்கூறிய பத்துள் ஆணை, தொழில் என்பனவற்றிற்குப் பதிலாகப் பெயரும் முரசும் இடம் பெற்றன. “புல்லும் மலையாறு நாடுஊர், புனைதார்மா கொல்லுங் களிறு கொடிமுரசம் வல்லகோல் ... நின்ற தசாங்கம் என நேர்”2 என்பது வெண்பாப்பாட்டியல். இதில் ஆணை, கோல் எனப்பட்டதுடன், தொழிலுக்குப் பதிலாக முரசம் கூறப்பட்டது. “பத்து இயல்வெண் பாவின்மலை நதி நாடு ஊர்தார் பரிகளிறு கொடி முரசு செங்கோல் பாடின் மெத்து தசாங்கப் பத்து ஆம்”3 என்பது சிதம்பரப்பாட்டியல். இப்பாட்டியல் நூல்கள் எவற்றிலும் இந்நூலாசிரியர் பிறழ்ந்து வருவதாகக் கூறிய குடை இடம்பெறவில்லை என்பது கருதத்தக்கது.
இந்நூலாசிரியராலேயே இயற்றப்பட்ட திருச்செந்தூர்த்தசாங்க வகுப்பு என்ற நூலில் நாடு, ஊர், மலை, ஆறு, யானை பரி (மயில்), படை, தார், கொடி, ஆணை என்ற பத்து அங்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூற்பாவில் முற்கூறப்பட்ட பத்துனுள் தொழிலுக்குப்பதில் படை இடம்பெற்றுள்ளது. இவருடைய திருச்செந்தில் உலாவில் நாடு, ஊர், மலை, நதி, முரசு, வாகனம் (யானை, மயில், தகர்), கொடி, படை, தார், ஆணை ஆகப் பத்தினைக் குறித்துள்ளார். இதில் யானை, பரி என்ற இரண்டும் ஊர்தி எனப் பொதுவாகக் கொள்ளப்பட்டதுடன் தொழிலுக்குப் பதில் முரசு இடம் பெற்றுள்ளது.
இந்நூற்பா மிக அதிகமாகப் பழக்கத்தில் உள்ள உலா, தூது ஆகிய இரு சிற்றிலக்கியங்களைக் கருத்தில்கொண்டு, “பிரபந்த முகப்பில் பேசப்படுபவே” எனக்கூறினும் சின்னப் பூ, தசாங்கம், தசாங்கத்தயல் என்னும் பிரபந்த வகைகள் தலைவனின் தசாங்கத்தை வருணித்துக் கூறுவதையே தம் பாடுபொருளாகக் கொண்டவை என்பது அறியத்தக்கது.
(600)