அணியிலக்கணம்414
சூரியனின் வெப்பத்தினால் கொதிக்கிறது. ஞானியின் உள்ளம் சினத்தீ சேர்வதால் கொதிப்படைகிறது. இவை வேற்றுப் பொருள் சேர்க்கையாலான மாற்றம். சூடுண்ட நிலம் உயிர்களை வருத்துகிறது. கோபத்தால் ஞானி குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்கிறார். நிலத்தின் சூடு, ஞானியின்சினம் ஆகிய இரண்டுமே நீடித்து நில்லாதவை. நிலம் கொதித்துத் துன்புறுத்தின பிறகு அதே உயிர்களுக்கு உதவுவதைப் போன்றே ஞானி ஒரு சமயத்தில் தண்டித்தாலும் உடனே மறந்து மீண்டும் நன்மை செய்கிறார். இவ்வாறு இயற்கைப்பண்பு, இடையில் நேரும் மாற்றம், பயன் ஆகியவற்றால் நிலத்தை வேண்டுதல் வேண்டாமை இல்லாத ஞானியாகக் கற்பனை செய்வது முற்றிலும் பொருத்தமாகும்.
நிலத்தையும் ஞானியரையும் ஒன்றாகக் கூறும் இதனைச் சொல் மாற்றங்களால் உவமையாகவும் உருவகமாகவும் கூறலாம். இக் கற்பனை நிலம், ஞானி என்னும் இரண்டிற்கும் உள்ள பொதுத் தன்மை பற்றியே பிறந்தது. இதுபற்றியே முன் நூற்பாவில் “உவமையின் சார்பதாகி” எனப்பட்டது.
(607)
75.வரவுகொண்டு யாதும் மற்றையர்க்கு ஈயார்
 மனையிடை திருடர் வந்துவந்து உழக்கிப்
 பொருள்எலாம் கவர்தல் பொருப்புநீர் புகப்பெற்று
 ஒருபயி ரேனும் வளரா உவரியை
 எழுமுகில் உண்கைக்கு இணைஆம் என்றலும்
 கற்பனை ஆம்எனக் கழறுதல் இயல்பே.
பல வகைகளிலும் பொருளை ஈட்டிப் பிறர்க்குக் கொஞ்சமும் கொடுக்காத உலோபியின் வீட்டில் கள்ளர்கள் புகுந்து தேடித் தேடி அங்குள்ள பொருள்கள் அனைத்தையும் திருடிச் செல்வதற்கு மலையிலிருந்து தோன்றுகின்ற ஆறுகள் எல்லாம் தன்பால் சேரப் பெற்றும் தன் நீரால் ஒரு பயிரையும் வளர்க்காத கடல் நீரை ஏழு மேகங்களும் சேர்ந்து பருகுதலை உவமையாக்கிக் கூறலும் கற்பனையே என்று கூறப்படும் என்றவாறு.
உலோபியரின் பல்வகை வரவி-கடலில் கலக்கும் பலவகைத் தண்ணீர்.