அணியிலக்கணம்416
மலையை நாடி மேகங்கள் வருவதைப் போலச் சான்றோர் களிடத்தைத் தேடி மெய்யறிவு வந்தடையும் என்று கூறலும் கற்பனை என்றே சொல்லப்படும் என்றவாறு.
இந்நூற்பா பருப்பொருட்களுக்கேயன்றிக் கட்புலனாகாத நுண்பொருள்கட்கும் கற்பனையில் இடமுண்டு என்கிறது. மெய்ப்பொருள் என்றது ஆகுபெயராக மெய்ப் பொருளைப் பற்றிய ஞானத்தைச் சுட்டி நின்றது.
(610)
78.மறுஉறா மதியம் ஆறு போலும்
 முகம்உறு குகவேள் என்கையும் ஒருவகைக்
 கற்பனை ஆம்எனக் கருதுநர் சிலரே.
களங்கம் இல்லாத முழுமதி ஆறு வரிசையாக இருப்பதைப் போன்ற ஆறு திருமுகங்கள் உடையவர் முருகப்பெருமான் என்று கூறினாலும் அதுவும் ஒருவகைக் கற்பனையே என்பார் சிலர் என்றவாறு.
களங்கம் இல்லாத திங்கள் இல்லாததொன்று. அவ்வாறே ஆறு மதிகளும் கிடையா. இல்லாதவனவற்றை உள்ளதாகப் பாவித்து இங்கே உவமை கூறப்பட்டது. அணிநூலார் இதனை ‘இல்பொருள் உவமை’ என்பர். வடமொழியில் இது அபூத உவமை எனப்படும்.
(611)
79.கீழ்த்திசை வடதிசை ஆகிக் கிளரொளி
 இரவியும் உதிப்பினும் இயற்றமிழ்ப் பொதுமறை
 ஆயவள் ளுவன்சொல் அறிந்த மேலோர்
 கொலைபுலை நலம்எனக் கூறார் என்கையும்
 ஒருசிறப்பு ஆகும்என்று உரைப்பார் உணர்ந்தோர்.
“கிழக்குத்திசை வடக்காக மாறி அங்கே சுடர் பரப்புகின்ற சூரியன் தோன்றினாலும் இயற்றமிழ்ப் பொதுமறையாகிய திருக்குறளை நன்குணர்ந்த பெரியோர் பிற உயிர்களைக் கொல்வதையும் ஊன் உண்ணலையும் ஏற்கத்தக்கது எனக் கூற மாட்டார்கள்” என்பதுபோலச் சொல்வதையும் புலவர் ஒரு சிறப்பான கற்பனைவகையாகக் கொள்வர் என்றவாறு.