அறுவகையிலக்கணம்417
இக் கற்பனையில் உவமை இடம்பெறவில்லை. திசைமாறலும் ஆதவன் வடக்கே உதித்தலும் எங்கும் என்றும் நடைபெற இயலாத நிகழ்ச்சி. இத்தகையதோர் அசம்பாவிதம் நேர்ந்தாலும் எனக் கற்பனை செய்யப்படுகிறது. இதனை ஒரு வகையால் அசம்பாவித உபமா என்னும் கூடாஉவமை அணிக்கு இனமாக்கலாம். “கூடாததனைக் கூடுவதாகக் கொண்டதன் ஒன்றற்கு உவமை யாக்கி உரைப்பது கூடா உவமை ஆகும்”1 என்றவாறு இங்கு உவமை இடம்பெற வில்லை. இதுவே வேறுபாடு.
(612)
80.கற்பனை புலவோர் கருத்தின் அளவாம்
 அஃதையும் விரித்திடில் அனந்தம் ஆமே.
கற்பனை ஒரு கவிஞனுடைய அறிவு எவ்வளவு பரந்து. பட்டுள்ளதோ அவ்வளவும் விரியக்கூடியதாகும். எனவே அக்கற்பனையைப் பலவகையாக விரித்துரைக்கத் தொடங்கினால் கணக்கற்றுப் பெருகும் என்றவாறு.
இங்குக் கருத்து என்றது ஒரு புலவனின் கல்வியறிவு, படைப்பாற்றல் ஆகிய இரண்டையும் அடக்கி நின்றது. இந்நூற்பாப் பொருளே இவரால் பிறிதோரிடத்தில், “அணிஎனல் புலவோன் அறிவு அளவு ஆமே”2 என்றும் கூறப்படுகிறது.
81.இவ்வணம் பகர்ந்திடல் இன்ன கற்பனை
 என்றன ராம்சிலர்; யாம்உணர் காலைஅப்
 பெயரும் கற்பனை எனப்பிறங் கினவே.
இன்னின்ன விதமாகச் செய்யுள் இயற்றினால் அவை இன்னின்ன அணிகள் ஆகும் என்று அணிநூலார் கூறியுள்ளனர். நாம் அதனைச் சிந்தித்துப் பார்த்தபோது அந் நூலாசிரியர் இட்ட பெயர்களும் அவர்கள் கற்பனையில் தோன்றி எழுந்தன வேயாகும் என்பது தெளிவாகப் புலப்பட்டது என்றவாறு.