அணியிலக்கணம்420
கோழி கூவுதலும், காகம் ஆந்தை முதலிய பறவைகளின் தொனியும், கரிக்குருவியின் ஓசையும், கோட்டானும் திருடரும் தம் இருப்பிடத்திற்குச் செல்லலும், வாலிபரும் மங்கையரும் பிரிவை எண்ணிக் கலக்க முறுதலும், மறைநூல்வழி ஒழுகுகின்றவர்கள் உள்ளம் உவத்தலும் அதிகாலையாகிய சிறு பொழுதுக்குரியனவாம் என்றவாறு.
கதிரவன் உதிப்பதற்கு முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்துச் சூரியனை நமஸ்காரத்திற்காக வைதிகர் எதிர்பார்த் திருப்பர். இறைவழிபாட்டால் அவர் களிப்படைவர். எனவே இது இந் நூற்பாவில் இடம்பெற்றது.
(618)
காலை நேரம்
86.கதிரவன் உதித்துள காலையில் நிகழ்வன
 தாமரை மலர்தலும்; சற்குரு பரன்அருள்
 குறிப்பார் தம்கரம் குவிதலும்; அவரவர்
 தம்தொழில் முயல்வதும்; சலதியும், குறைமதி
 ஒளியும், காமமும் ஒடுங்கலும்; உடுஇனம்
 அனைத்தும் மறைதலும் அன்னசீர் பலவுமே.
தாமரைப்பூ விரிதல், ஞான பண்டிதனாகிய முருகப் பெருமான் அருளை நாடும் அடியார்கள் கைகூப்பி வணங்குதல், தொழிலாளர்கள் அனைவரும் தத்தம் பணிகளில் ஊக்கத்துடன் ஈடுபடுதல்; கடலின் ஆர்ப்பும் பிறைச் சந்திரனின் பிரகாசமும் காமஉணர்வும் குறைதல்; நட்சத்திரக் கூட்டங்கள் யாவும் முற்றிலும் மறைதல் ஆகிய நிகழ்ச்சிகளும் இன்ன சிறப்புகள் பலவும் சூரியன் தோன்றுகின்ற காலையில் நிகழ்வனவாம் என்றவாறு.
சற்குருபரன் என்பதற்குப் பொதுவாக ஞானாசிரியன் எனப் பொருள்கொண்டு மாணவர்கள் தத்தம் குருநாதருக்குப் பணிவிடை செய்து வணங்குதல் எனினும் ஆம். சூரியன் உதித்த