அறுவகையிலக்கணம்421
பிறகும் சந்திரன் ஒளி இழந்து காட்சிதரும் ஆதலின் மதி மறையும் என்னாது ஒளிஒடுங்கும் என்றார். “காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலர்தல்”1 காமத்தின் பண்பு.
(619)
நண்பகல்
87.அதன்அதன் நிழல்அதன் அடியில்ஆம் பொழுது
 அருந்திறல் வீரருக்கு ஆண்மை மிகலும்,
 துறவிகள் வீதிகள் தோறும் ஏற்கையும்,
 வழிநடப் பவர்எலாம் மரநிழல் சார்தலும்,
 அங்காடி வணிகருக்கு அரைத்துயில்வு அணுகலும்,
 சிற்றில்விட்டு எழுந்து சிறார்நுதல் வெயர்ப்பத்
 தாயர்முற் போய்அவர் தரும்பால் அருந்தலும்
 உழவர்ஏர் அவிழ்த்தல் ஆதியும் ஒளிருமே.
அரிய வலிமையை உடைய வீரர்களின் வீரம் அதிகமாதல், துறவிகள் தெருக்களில் சென்று உணவு இரந்து ஏற்றல், வழிப்போக்கர்கள் அனைவரும் (வெய்யில் தாளாமல் ஓய்வெடுக்கவும் பகலுணவிற்காகவும்) மரங்களின் நிழலிற் சென்றடைதல், கடையில் உட்கார்ந்தபடி பணியாற்றும் வியாபாரிகளுக்குச் சற்றே தூக்கம் வருதல், தாம் இழைத்து விளையாடிக் கொண்டிருக்கும் சிற்றிலை நீத்துக் குழந்தைகள் நெற்றி வியர்வையுடன் தத்தம் தாயரையடைந்து அவர்தரும் பாலைக் குடித்தல், விவசாயிகள் காலையில் பூட்டிய ஏரை அவிழ்த்து விட்டுவிட்டு உணவருந்தச் செல்லல் ஆகிய நிகழ்ச்சிகளும் பிறவும் ஒரு பொருளின் நிழல் அதன் காலடியிலேயே விழுகின்ற உச்சிப் போதுக்குரியன ஆகும் என்றவாறு.
சிற்றில் இழைத்தும் சிதைத்தும் விளையாடும் குழந்தைகள் தாய்ப்பால் அருந்தும் நிலையிலும் திட உணவு கொள்ளும் நிலையிலும் இருப்பர் ஆதலின் இங்கு ‘அவர் தரும் பால்’ என்பதை உணவுக்கு உபலக்ஷணமாகக் கொள்க.
(620)