அணியிலக்கணம்422
மாலைப்பொழுது
88.மாலையில் செக்கர் மதிஉடுத் தோற்றமும்,
 காவி மலர்தலும், கமலம் குவிதலும்,
 கள்வரும் காமனும் களித்தலும், கற்றா
 மேய்ந்துதன் கன்றினை விரும்பிச் சேறலும்,
 பாலரொடு கலைமகள் பள்ளிக் கூடம்
 விட்டு நீங்கலும், வேலைமிக்கு ஆர்த்தலும்
 வாவலும் கூகையும் வல்லியம் ஆதியும்
 திரிதரத் துவக்கலும், சீதரன் போலும்
 இருள்வரல் ஆதியும் இயங்கும் அன்றே.
செவ்வானம், சந்திரன், நட்சத்திரம் ஆகிய இவற்றின் தோற்றம், குமுதம் மலர்தல், தாமரை குவிதல், திருடர்களும் மன்மதனும் உவகையோடு சுறுசுறுப்படைதல், இளங்கன்றினை உடைய பசு புல்மேய்ந்து முடிந்தபின் தன் கன்றை அடைய விரும்பித் தொழுவத்திற்கு வந்தடைதல், மாணவரும் சரஸ்வதியும் பள்ளிக்கூடத்தைவிட்டு நீங்குதல், கடல்பெரு முழக்கம் செய்தல், வௌவால், கோட்டான் போன்ற பறவைகளும் புலி போன்ற காட்டு விலங்குகளும் இரை தேடி அலைய ஆரம்பித்தல், திருமாலைப் போன்ற கரிய நிற இருள் சூழ்தல் முதலிய செயல்கள் மாலைக்காலத்தில் நிகழும் என்றவாறு.
பள்ளிக்கூடமாகிய வெறும் கட்டிடத்தில் கலைமகள் குடியிருப்பதில்லை. கற்றலும் கற்பித்தலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரைதான் அவள் அங்கிருப்பாள். இந்நூற்பா கலை மகள் நீங்கல் என்றது கற்பிக்கும் பணி முடிவுறுதலை.
(621)
நள்ளிரவு
89.பாதி இரவில் பசாசரும் அரக்கரும்
 உரகரும் களித்தலும், உரைக்கரும் உயிர்பல
 கண்துயின்று அயர்கையும், அன்றிக் காயாம்
 பூமலர்ந்து நொச்சிப் பூஉதிர் வுறுமே.