அறுவகையிலக்கணம்425
முதிர்வேனில் அல்லது முதுவேனிற்பருவம் என்பது ஆனி ஆடி மாதங்கள்.
(624)
கார்காலம்
92.தாய்வயிற் சேய்எனத் தழைபயிர் மிளிர்தலும்,
 மண்டுகம் ஆர்த்தலும், மயிலினம் ஆடலும்,
 குயிலும் குரங்கும் கொடுவிடப் பாம்பும்
 மெலிதலும், புனல்வளம் மிகுத்தலும், மின்னார்
 தனந்தொறும் வெப்பம் தழைத்தலும், தனுஎனக்
 காணும் முதுகினர் கனற்றுணைக் கொளலும்,
 சிற்றுயி ரினம்பல சிதைதலும், பெருகலும்,
 வெய்யிலும் நிலவும் மிகுத்தலும் கெடுதலும்
 அன்னசீர் அனந்தம் ஆகும் அணிமழைக்
 காலத்து என்னக் கழறினர் கற்றோர்.
வளர்ந்துள்ள பயிர்கள் அனைத்தும் தம் தாயாரின் அரவணைப்பிலுள்ள குழந்தைகளைப்போன்று செழிப்புடன் திகழ்தல், தவளைகள் ஒலித்தல், மயில்கள் தோகை விரித்து ஆடுதல், குரங்கு, கொடிய நஞ்சுள்ள அரவு ஆகியவை வருந்தல், எல்லா இடங்களிலும் நீர் நிறைந்திருத்தல், மங்கையரின் நகில்கள் வெப்பமடைதல், குளிராற் குறுகி வில் போன்ற முதுகினை உடைய மக்கள் குளிர் காய்வதற்குத் தீயைப் பயன்படுத்தல், (வெள்ளத்தால் புற்றுகள் அழிவதால்) எறும்பு கறையான் போன்ற பல சிற்றுயிர்கள் இறத்தல், ஈசல், தட்டான்பூச்சி, வெட்டுக்கிளி போன்ற பல சிற்றுயிரினங்கள் பெருகுதல், மேகமூட்டம் இல்லாதபோது வெய்யிலின் கடுமை அதிகரித்தல், மேகம் அதிகமாக இருக்கும்போது வெய்யில் குறைதல், இவ்வாறே திங்களும் ஒளிமிக்கும் குறைந்தும் காணப்படல் என்பவை போன்ற பற்பல சிறப்பு நிகழ்ச்சிகள் மழைக் காலத்திற்குரியன என்று புலவர்கள் கூறியுள்ளனர் என்றவாறு.
மயிலினம் ஆடல் - “கார்காண் மஞ்ஞையிற் களிப்ப”1