ஞானாசிரியனுக்குச் சொந்த அநுபூதியும், ஒழுக்கமும், பிற உயிர்களிடத்துக் கருணையும் இன்றியமையாதனவாகும். எனவே தான் சீரிய என்னும் அடைமொழிக்கு அவ்வாறு விரிவாக உரைக்கப்பட்டது. (627) |
95. | கொடுங்கோல் வேந்தனும் கொலைத்தொழிற் குரவனும் | | மகிழ்வில் புவியொடு மன்பதை அழுமே. |
|
கொடுங்கோல் மன்னனும், உயிர்க்கொலையை உடைய ஆசிரியனும் உவகைமிக்குச் சிறந்து விளங்கும்போது நிலமும், அதிலுள்ள மக்கட்கூட்டமும் வருந்திக் கண்ணீர் பொழியும் என்றவாறு. |
இதனையே இவர் வேறொரு நூலில், “கொலைமுதலாம் தீமைக் குலம் வளர்க்கும் மன்னால் அலையுடுத்த பார்மாது அழும்”1 எனக் கூறியுள்ளார். (628) |
96. | தெய்வக் குறிப்பில் திரள்தோள் மன்னனும் | | மன்னவன் மொழிவழி மாந்தரும் நிகழ்கை | | பழமை ஆம்எனல் பழுதில் வழக்கே. |
|
திரண்ட தோள்களை உடைய அரசர்கள் ஊழ்வினைக்கு ஏற்பவும், உலகமக்கள் வேந்தனின் ஆணைப்படியும் இயங்குவார்கள் என்பது தொன்றுதொட்ட மரபாகும் என்றவாறு. |
“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்”2 என்புழிப்போல இந்நூற்பாவில் தெய்வம் என்ற சொல் ஊழ்வினையைக் குறித்து நின்றது. “மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி” என்பது பழமொழி. |
மேலும், “ஆன்ற ஒழுக்கத்து அரசு அமைந்தா லன்றி உலகு ஏன்று அதனை மேற்கொண் டிடா”3 என்பது இவர் கருத்து. (629) |
|