97. | இவ்வகைத்து ஆகும் இயல்பாம் நிகழ்ச்சியின் | | பகுதியும் கோடையிற் கல்மழை பெய்தல் | | ஆதி ஆய மாறுபடும் நிகழ்ச்சியும் | | அறிவது புலவோர்க்கு ஆன முறையே. |
|
அவ்வக் காலத்தில் இயல்பாக நடைபெறவேண்டிய நிகழ்ச்சிகள் இவைஇவை என்பதனையும், கோடைக்காலத்தில் ஆலங்கட்டி மழை பொழிதல் போன்ற விதிவிலக்கான சிற்சில மாறுபாடுகளையும் தக்கவாறு அறிந்து கோடல் அறிஞர்களுக்குக் கடமை ஆகும் என்றவாறு. |
நிகழ்ச்சி இயல் இத்துடன் முற்றுப்பெறுகிறது. இந்நூலாசிரியர் வழக்கப்படி “இவ்வியல்பு முற்றிற்று; அடுத்த இயல்பு உரைப்பாம்” எனக்கூறும் நூற்பா இங்கு இடம் பெறவில்லை. (630) |
V. ஆக்க இயல்பு |
யார்யார்க்கு அல்லது எதெதற்கு எதனால் சிறப்புண்டாகும் என இவ்வியல்பில் கூறப்படுகிறது. இப்பிரிவு பன்னிரண்டு நூற்பாக்களை உடையது. |
முன் இயல்பின் இறுதி நூற்பாவில் இவ் வியல்புக்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்படாமையின் இங்கு முதல் சூத்திரம் அவ்வாறு அமைகிறது. |
98. | அணியினுக்கு அணியாம் ஆக்கம் கூறுதற்கு | | அமையா; ஆயினும் அறைகுதும் சிறிதே. |
|
செய்யுள் அலங்காரத்திற்கு அழகு தருவதாகிய சிறப்பியல்புகள் இன்னின்னவை என முற்றிலும் சொல்ல முடியாது. (இதனை நன்கு உணர்ந்திருந்தும் உதாரணம் காட்டுதல் போலச்) சிலவற்றின் சிறப்பியல்புகளைக் கூறுவாம் என்றவாறு. |
ஒரு பொருளின் சிறப்பு யாது என நன்குணர்ந்த பிறகே அப் பொருளை உவமையாகவும் கற்பனையாகவும் ஆள முடியும். எனவே இந்நூற்பாவில் “அணியினுக்கு அணியாம் ஆக்கம்” என்றார். முதலது செய்யுளணியியல்; மற்றது அழகு. |