அணியிலக்கணம்430
99.அடிதொழும் தொண்டர் அட்டமா சித்தியும்
 முத்தியும் பெறச்செயல் முதல்வற்கு ஆக்கமே.
தன்னைப் பணியும் அடியார்கள் எண்வகையான சித்திகளையும் பேரின்ப வீட்டையும் அடையுமாறு அருள்பாலித்தல் பரம்பொருளுக்குச் சிறப்பாம் என்றவாறு.
“ஒருவன் இலட்சாதிகாரியாவதன்முன் கோடீசுரன் ஆகான் என்பதுபோல எப்படிப்பட்ட தவசியும் சித்தன் ஆவதன்முன் முத்தன் ஆவதில்லை” என்பது1 இவர் கொள்கை. அதற்கேற்பச் சித்தியை முற்கூறி யடுத்து முத்தியை வைத்தார்.
ஈசன் கொடுக்குமவை எல்லாவற் றும்பெரியது ஆசுஅகன்ற முத்திஅதே2 ஆதலின் முதல்வதற்கு ஆக்கம் எனப்பட்டது.
(632)
100.இரக்கமும் சுத்தமும், இறைவனை மறவாத்
 தொண்டும் தூய்மையும் துறவோர்க்கு ஆக்கமே.
பிற உயிர்களிடத்துக் கருணை உடையவன் ஆதல், உள்ளத் தூய்மை, கடவுளை எக்கணத்திலும் மறந்துவிடாமல் இறை பணியாற்றுதல், தன் உடலைத் தூய்மையாக வைத்திருத்தல் என்பன துறவிகளுக்குச் சிறப்பாகும் என்றவாறு.
“உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு”3 ஆதலின் இரக்கம் முன்கூறப்பட்டது. “முதலில் சொல்லப்பட்ட சுத்தம் உள்ளத்தூய்மையும், பிறகு வந்தது உடற்றூய்மையும் ஆம். “புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்”4 என்றமையால் சுத்தம் என்பதற்கு வாய்மை எனினும் அமையும்.
101.சுவைமிகச் சொல்லலும் சொற்படி முடித்தலும்
 புலவருக்கு ஆக்கம் என்னும் புவியே.