அணியிலக்கணம்436
108.வாவிக்கு ஆக்கம் வனசமும் குவளையும்;
 கோவிற்கு ஆக்கம் குலவு கோபுரம்;
 நாவிற்கு ஆக்கம் நன்மொழி உரைத்தல்;
 பூவிற்கு ஆக்கம் பொலிநறை வண்டுஎன
 விரியாது அடக்கினம் ஆயினும் வியன்தமிழ்
 உரிமை யாளர் உணர்வது கடனே.
“குளத்திற்குச் சிறப்புத்தருவது தாமரையும் நீலமும் ஆகும்; ஆலயத்திற்குப் பெருமை சேர்ப்பது இராசகோபுரம் ஆகும்; நலத்தைத் தருகின்ற இனிய மொழிகளைப் பேசுதல் நாவிற்குச் சிறப்பாம்; மலர்களுக்குத் தேனின் நிறைவும் வண்டுகளின் சேர்க்கையும் எழில் தருவனவாம்” என்றெல்லாம் மிக விரித்துப் பெருக்கமால் இவ்வியல்பை இத்துடன் முடித்துக் கொள்கிறோம். எனினும் பெருமை மிக்க தமிழுக்கு உரிய மாணவர்கள் இவற்றை எல்லாம் வல்லார்வாய்க் கேட்டறிவது இன்றியமையாததாம் என்றவாறு.
“குளத்துக்கு அணிஎன்ப தாமரை’1 நாவை உடையவனின் சிறப்பு நாவின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. “பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி”2 என்பது தமிழ்மறை. பொலிநறை-வினைத்தொகை. நறைவண்டு-உம்மைத்தொகை.
தமிழ் உரிமையாளர் என்றது அம்மொழியை எடுத்து ஆள விரும்புபவர்களை.
(641)
109.ஐந்தாம் இலக்கணம் ஆகும் அணிமுடித்து
 ஆறாம் இலக்கணத்து ஆவல்கூர்ந் தனமே.
ஐந்தாவது இலக்கணம் ஆகிய அணியை இத்துடன் நிறைவு செய்து அடுத்து ஆறாவதாகிய புலமை இலக்கணத்தை எடுத்துக்கூற விழைகின்றோம் என்றவாறு.
இந் நூற்பாவுடன் அணி இலக்கணம் நிறைவு செய்யப்படுகிறது.
(642)
ஆக்க இயல்பு முற்றிற்று
அணியிலக்கணம் முற்றிற்று
ஆகச்சூத்திரம் 642.