புலமையிலக்கணம்438
1.அலகுஇலா மறைகட்கு அன்னை ஆகி
 இலகு பாரதிக்கு இலக்கணம் இசைத்துஅவள்
 கொழுந னார்தலை குலுங்கக் குட்டிய
 கடவுள் இணையடிக் கமலம் போற்றிப்
 புலமை இலக்கணம் புகலுதும் சிறிதே.
கணக்கற்ற அறிவுநூல்களுக்குத் தாயாக விளங்கும் கலை மகளுக்கு இலக்கணத்தைப் போதித்தவரும், அவளுடைய கணவனாகிய பிரமனின் தலைகள் நடுங்குமாறு குட்டியவருமாகிய முருகப்பெருமானின் இரண்டு திருவடித் தாமரைகளைப் புகழ்ந்து புலமை இலக்கணத்தை ஒரளவு கூறுவாம் என்றவாறு.
“எண்எண் கலைமான் உணர்த்திய வேதமுமே”1 என்றான் கம்பநாடன். அதுபற்றி அலகிலா மறைகட்கு அன்னை என்றார். ஈண்டு மறை என்றது அறிவுநூல்களை. இதனை வடமொழியில் சாத்திரம் என்பர்.
“கற்றதுகைம் மண்ணளவு கல்லாதது உலகளவுஎன்று உற்ற கலைமடந்தை ஓதுகின்றாள்”2 என அவ்வையார் கூறியவாறு முழுப்புலமையும் கல்விச் செருக்கின்மையும் கொண்ட நாமகளுக்கு நன்மையையும் குறையறிவும் அகந்தையும் கொண்ட பிரமனுக்குத் தண்டனையையும் தந்த முருகப்பெருமான் என்று கூறியதாலேயே புலவர்கள் அறிவின் நிறைவைப் பெற முயலவேண்டும் என்பதுவும், அவர்களுக்கு எந்த நிலையிலும் செருக்கு வரக்கூடாதென்பதுவும் இங்கேயே வலியுறுத்தப்பட்டன.
(643)
2.அறியும் தன்மையைப் புலமை ஆம்எனப்
 பற்பல பெரியோர் பகர்ந்தனர் அன்றே.
இந்நூற்பா புலமை என்றால் என்ன எனக் கூறுகிறது.
ஐம்புலன்களின் உதவிகொண்டு ஒருவன் ஒன்றைப்பற்றிய அறிவைப் பெறும் பான்மை புலமை எனப்படும் என்று பல அறிஞர்கள் முன்பே கூறியுள்ளனர் என்றவாறு.