அறுவகையிலக்கணம்447
அமைந்து நிறையப் பாடுதற்கு நல்ல வாய்ப்பளித்தலானும் அத் தெய்வத்தைப் பாடிய முன்னோர் மரபுகள் சிறந்த வழிகாட்டியாக அமைந்திருத்தலானும் தோத்திரங்கள் பாடுதல் கவிதைக்கலையைக் கையகப்படுத்தச் சிறந்த அணுகுமுறையாக உள்ளது. மேலும் தோத்திரங்களை யாரும் எளிதில் பழிக்கவும் மாட்டார்கள். இவ்வாறன்றி நிறை விரித்துக் கூற இடம் இல்லாததும், தெளிவான நெறிமுறைகள் அமையாததும் ஆகிய எதையாவது ஒன்றை எடுத்துப் பாடத் தொடங்கினால் சொல் பொருள் கிடைக்காத தளர்ச்சி, ஆரம்பித்ததைச் செவ்வனே நடத்திச் சென்று முடிக்காததால் ஏற்படும் சிறுமை, தோல்வியால் வரும் நாணம் ஆகியன வந்தெய்தும். எனவேதான் தெய்வத்துதிவழிப் புலமை தேறவேண்டும் என்றார்.
மற்றொன்று. இந் நூலாசிரியர் காலத்திலும் அதற்குச் சற்று முன்னதாகவும் இருந்த புலவர்களில் சிலர் குறுநில மன்னர்கள், செல்வர்கள் ஆகியோர் மீது அகத்துறை என்ற பெயரால் காமச்சுவையை மிக அதிகமாகவும் ஆபாசமாகவும் நிறைத்துக் கவிபாடி வயிறு வளர்த்து வந்தனர். பாரதியாரின் “சின்னச் சங்கரன் கதை” யில் இவ்விழிநிலை நன்கு காட்டப்பட்டுள்ளது. அப்போக்கு ஒழுக்கத் தளர்ச்சியையும் (நைவு), சமுதாயத்தில் சிறுமையையும், சான்றோர் முன்னே நாணத்தையும் தருதல் ஒருதலை. ஆதலின் அதனை நீக்குக என்பார் தெய்வத்துதிவழி கடைப்பிடிக்க என்றார்.
கற்றதனாலாய பயன் வாலறிவன் நற்றாள் தொழலே யாதலின் இலட்சியமாகிய இறையன்பே கல்விக்குச் சாதனமாகவும் அமையவேண்டும் என்றபடி. இவ்வாசிரியர் தம் ஏழா மிலக்கணத்தில் இதுபற்றியே, “தெய்வப் பத்தியிற் றிளையா வொருவன் கல்வி நலம் எணில் கள்ளிப் பாலே”1 எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
(655)
14.சிந்தையின் மயக்கம் தெளியா முன்னம்
 சித்திரம் பாடில் அஃதும் தீதாய்
 மற்றைய கவிகளின் வனப்பும் குன்றுமே.