சிற்றிலக்கியங்கள் யாவும் முத்தகம் எனப்படும் தனிக்கவிகளானியன்றவை. ஒரு பாடலின் எழுவாய், பயனிலை அதன் கண்ணேயே அமைந்து பொருள் முற்றுப் பெற்றுவிடுகிறது. மேலும், அவ்வகைப் பிரபந்தத்திற்கு என்று விதிக்கப்பட்ட மிகச் சிலவகை யாப்புகள் மட்டுமே பயின்று வருபவை. (கலம் பகம் மட்டும் இதற்கு விதிவிலக்கு) | ஆனால், காவியங்களில் பல பாடல்கள் தொடர்ந்து நடந்து ஒரு வினைமுடிபு பெறுகின்ற குளகச் செய்யுள் மிக்குவரும். இதனால் பால், திணை, எண், காலம் முதலியனவற்றில் வழுக்கள் தோன்றாமலும், எச்சங்கள் உரிய முடிபுகளைச் சரியாகப் பெறுமாறும், மிகவும் கவனமாக இயற்றப்பெறுதல் வேண்டும். அத்துடன் காவியத்தில் பல சுவைகளும் விரவி வருதலால் இடத்திற்கேற்ற யாப்பு தேர்ந்தொடுக்கப்பட வேண்டும். மேலும், காவியங்களில் கதைமாந்தர், நிகழிடம் போன்ற இயற்பெயர்கள் அடிக்கடி வரும். இவற்றை அந்தந்த யாப்பில் திறமையுடன் அமைக்கவேண்டும். காவியத்தில் விரித்துக் கூறுமிடங்களில் விரித்தும், சுருக்கிக் கூறுமிடங்களில் சுருக்கியும் பாட வேண்டும். வருணனைப் பகுதிகளில் ஓரளவு திரிசொற்களையும் மிறைக்கவிகளையும் பயன்படுத்தினாலும், கதையோட்டம் நிறைந்த இடங்களிலும், மெய்ப்பாடு வெளியாகும் இடங்களில் நடை இயல்பாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும். காவியங்களில் கவிக்கூற்றும், கதைமாந்தர் கூற்றும் விரவி வரும். அக்கூற்றில் கையாளப்படும் நடை அவர் அறிவு, தகுதிகட்கேற்ப அமைவதோடு அப்பாத்திரத்தின் மனநிலைக் கேற்பவும் அமைதல் வேண்டும். இத்துணைக் கட்டுப்பாடுகள் இருப்பதால் தான் சிற்றிலக்கியம் பாடிப் பழகிய பிறகே காவியம் இயற்றவேண்டும் என்றாரேஅன்றி வெறும் பாடற்றொகையைக் மாத்திரம் கருதி அன்று. ஏறத்தாழ நானூறு கட்டளைக் கலித்துறைகளால் அமைந்த ஒரு கோவையைப்பாடுவதைவிடச் ஏறத்தாழ முந்நூறு பாடல்களைக் கொண்டதொரு காவியம் பாட அதிகமான சிந்தனையும் உழைப்பும் தேவைப்படும். (662) |
|
|