புலமையிலக்கணம்454
21.காவிய நிலைகளும் கண்டு தேறி
 நூலினம் பகர்வது நுண்ணிமை யாமே.
நல்ல காவியப் புலமை கைவந்த பிறகே இலக்கணம் தத்துவம், சோதிடம், மருத்துவம் போன்ற அறிவுநூல்களை இயற்றத் தொடங்குதல் அறிவுடைமையாகும் என்றவாறு.
காவியம், சிற்றிலக்கியம் போன்றனவற்றுள் கற்பனை இலக்கியச்சுவை முதலியவைகளுக்கு நல்ல வாய்ப்பிருப்பதால் கற்பவர்களுக்குச் சோர்வு தோன்றாதவாறு கொண்டுசெல்ல முடியும். ஆனால், அறிவு நூல்களில் கற்பனைக்கோ, சொல் விளையாட்டிற்கோ, உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றம் போன்ற அணிகளுக்கோ சற்றும் இடமில்லை. காவியத்தின் பொருள் உணர்ச்சியில் சற்று மயக்கம் ஏற்பட்டாலும் பெரிய இழப்பு இல்லை. ஆனால், சாத்திரங்கள் எனப்படும் அறிவுநூல்கள் மிகத் தெளிவாகவும் ஐயத்திற்குச் சற்றும் இடமில்லாமலும் அமையவேண்டும். நூல் நுதலிய பொருள் இவற்றில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் விபரீதம் ஏற்பட்டுவிடும். எனவே, ஒரு புலவர் தாம் சொல்லக் கருதும் பொருளைத் தெள்ளத் தெளிவாகவும், கற்போருக்குச் சற்றும் அலுப்புத் தோன்றாதவாறும், அறிவு வளர்ச்சியால் உண்டாகும் இன்பத்தைத் தருமாறும் கூறும்ஆற்றல் பெற்றபிறகே அறிவுநூல்களை இயற்றத் தலைப்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட அறிவுத்துறையில் பேரறிவு படைத்த பெருமக்கள் சிலர் அத்துறையில் இயற்றிய அரிய நூல்கள் சுவையற்றனவாக இருப்பதற்கு அவர்கள் தமிழ்ப்புலமையை இவ்வழியில் வளர்த்துக் கொள்ளாததே காரணமாகலாம்.
(663)
22.சொல்நிறம் தன்நெஞ்சு அறியத் தோன்றும்
 அளவும் புலமையின் அவாஅடங் காதே.
சொற்களின் நிறத்தைத் தம் உள்ளம் உணரும்படியான மொழித்தெளிவு பிறக்கும்வரை இனியும் புலமையைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்னும் வேட்கை தீராது என்றவாறு.