அறுவகையிலக்கணம்455
இந்நூலாசிரியர் புதியன புகுத்தலாக எளிமை. அருமை நோக்கிச் சொற்களுக்கு வெண்மை, பளிங்கு, கருமை, செம்மை, பொன்னிறம் என ஐவகை நிறங்களை வகுத்து அவற்றை வெண்மை, செம்மை, கருமையில் அடக்கிக் காட்டுகிறார். (அறுவகை இலக்கணம்-சொல் 171 முதல் 179 வரையான நூற்பா) சொற்களைப் பற்றிய அத்தகைய தெளிவு பிறக்கும் வரையில் புலமை வேட்கை அடங்காது என்கிறார். அடங்காது என்ற வாய்பாட்டால் கூறப்பட்டிருந்தாலும், ஒரு மாணவனுக்கு அத்தகுதியைப் பெறும்வரைக் கல்வி வேட்கை இருந்துகொண்டே இருத்தல்வேண்டும் என்பதே ஆசிரியர் கருத்தாம். என்னை? கல்வித்துறையில் “தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்து அழிக; கற்றது எல்லாம் எற்றே இவர்க்கு நாம் என்று”1 என்பதே விதியாதலின்.
(664)
23.எவ்விதக் கவிகளும் பாடும் இரும்திறல்
 வரினும் பனுவலை மறுத்தும் தானே
 எழுதா நலம்நினைத்து ஏங்கல் இயல்பே.
அனைத்து வகையான நூல்களையும் இயற்றுகின்ற அரிய வல்லமை ஏற்பட்டாலும், தம்மாலியற்றப்பட்டதைத் தாமே மீண்டுமோர்முறை பரிசீலித்துத் திருத்தவேண்டிய நிலைமை தோன்றாத சிறப்பை விழைந்து, அதனைப் பெறுவதற்காக முயலல் நன்மாணாக்கர்களின் இயல்பாகும் என்றவாறு.
இந்நூற்பாவில் கவிகள் என்றது ஆகுபெயராகப் பனுவலை உணர்த்திற்று. ஒரு முறை இயற்றப்பெற்ற பிறகு மீட்டும் பரிசோதிக்கப்பெற்றுச் செப்பம் பெறவேண்டிய அவசியமே இல்லாமல் முதன்முறையிலேயே திருத்தமாக அமைந்து விடுதலே சிறப்பாகும். இந் நலத்தை நாடி ஏங்கல் இயல்பே என நூற்பா நுவலினும் வெறும் ஏக்கத்தால் பயனின்மை கருதி முயலல் என உரை காணப்பட்டது. “என்னொருவன்