புலமையிலக்கணம்458
26.கருதிய தெய்வம் கண்முன் தோன்றிப்
 பேசின் அல்லது பெருந்தகைப் புலமை
 எய்தாது என்றிடல் இயல்பாம் அன்றே.
தம்மால் தியானிக்கப்படுகின்ற கடவுளின் திருவடிவம் ஊனக்கண் காண எதிலே காட்சியளித்தும், தம் செவிப்புலன் கேட்குமாறு உரையாடியும் ஆட்கொண்டாலன்றி முழுப்புலமை அடைந்ததாகக் கூறமுடியாது எனல் மரபு என்றவாறு.
எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாக ஆகுமோ அதை அறிதலே மெய்யறிவு என்பதுவும், அது பரம்பொருளே என்பதும் இந்து சமய நெறிகள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட அடிப்படைக் கருத்தாம். “ஐயுணர்வு எய்திக் கண்ணும் பயமின்றே; மெய்யுணர்வு இல்லா தவர்க்கு”1 என்றதூஉம் இதுவே. தெய்வம் உபாசகன்முன் நிச்சயம் தோன்றும் என்பதை இவ் வாசிரியர் “தெய்வம் கண்எதிர் திகழாது என்னும் புன்மைத் தவத்தோர் புராணம் பலவற்று எண்ணில் பலர்கண்டிட்ட தாகச் சொல்லல்முற்று இகழ்ந்த தோடம் எய்திக் கீழமையர் ஆகிக் கெடுவார் அன்றே”2 “தெய்வத்தை மனத்தாலும் நேத்திரத்தாலும் கண்டு பேசத்தகும்”3 “தெய்வம் சருவவல்லபம் உடையது என்று ஒப்பியும் அது கண்ணாற் காணப்படாதது என்பவர் விவேக சூனியரே ஆவர்’4 எனப் பலவிடங்களில் பலவாறு கூறியுள்ளார்.
(668)
27.தெய்வம் தோன்றியும் சிறுநலம் துய்த்து
 மறுத்தும் நல்லார் வயிற்றுட் புகுவது
 பேதமை என்பார் பெரும்புல வோரே.
ஊனக்கண்முன் தெய்வம் தோற்றமளித்தும் அதனிடம் அளவால் சிறியதும் அழியக்கூடியதுமான உலகியல் போகப் பொருள்களை வேண்டிப்பெற்று இறந்து மறுபடியும் இன்னுமோர் தாய் வயிற்றில் பிறவியெடுப்பது அறியாமையாகும் என உணர்பவர்களே மெய்யறிவினர் ஆவர் என்றவாறு.