அறுவகையிலக்கணம்459
“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்டுவர் மற்றீண்டு வாரா நெறி”1 “இன்னும் ஒருக்கால் எழுத்துஉரு ஒருவர் காட்ட உணராக் கதிபெற நாடி முயலவல் லாரே முழுப்புல மையரே”2 என்பனவும் இதே கருத்தமைந்தன ஆம்.
(669)
28.அருள்வலிப் புலவ ராம்என விளங்கியும்
 பொருளுடைச் சிலர்பலர் போவது இழிவே.
திருவருளைப் பெற்றவர்களாக இருந்தும் புலவர்கள் சிலர் பொருளை நாடிச் செல்வர்களிடம் செல்வது உயர்ந்தது ஆகாது என்றவாறு.
செத்துப் பிறக்கின்ற மனிதர்களைப் புகழ்ந்து பாடி ஒரு புலவர் செல்வராக இருப்பதைவிட இறைவனைப் போற்றிப் பரவிக்கொண்டு இரந்துண்டு வாழ்தல் ஏற்றமானது என்னும் இவர் கொள்கை இந்நூலின் அடுத்த பகுதியாகிய தவறியல்பில் வலியுறுத்தப்படும்.
(670)
29.சொற்சுவை உணரான் தோள்வலிச் சுடர்வாள்
 மன்னன் ஆயினும் அஃதுஉணர் மாந்தரில்
 தாழ்வுஎன உணர்வான் தக்க புலவனே.
இலக்கியச் சுவை உணர்வு இல்லாதவன் பேரரசன் ஆயினும் அதனை உடைய சாமானியனைவிட இழிந்தவனே ஆவான் எனத் தெளிபவர்தம் சிறந்த அறிஞர் ஆவார் என்றவாறு
இதே கருத்து எதிர்மறை வாய்பாட்டால் அடுத்த தவறியல்பிலும் கூறப்படும்.
(671)
30.தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதுஎனில்
 அஃதுஉணர் அலகையில் தாழ்வுஎனல் அறமே.
ஒரு தெய்வம் தமிழினினிமையைத் துய்க்க அறியாது இருக்கிறது என்றால் அது தமிழ்ச்சுவையை உணரும் ஆற்றல் பெற்றதொரு பேயைவிடக் கீழானதே என்று கூறுதலே நீதியாம் என்றவாறு.