அறுவகையிலக்கணம்461
செய்ததாகவும் வழங்கியே அதிகமாகப் போற்றுகின்றனர். இறந்தவரைக் கவிபாடி எழுப்புதல், மழை பெய்வித்தல், அறம் பாடிச் சபித்தல் பற்றிய செவிவழி வரலாறுகள் இந்நூலாசிரியரின் காலத்தே மிகப் பல்கி இருந்ததைப் புலவர்புராணத்தால் தெள்ளத்தெளிய உணரலாம்.
இதே கருத்தை இவர் ஏழாமிலக்கணத்தும், “வண்ணப் பாநுவல் வாயின னேனும் சொற்படி நடவும் தொழில்இலன் ஆயிற் பல்இல் பாம்புஎனப் பரிதவிப் பானே”1 என மீட்டும் கூறியுள்ளார். அடுத்த நூற்பா உலகினரின் இவ்வியல்பைக் கூறுகிறது.
(673)
32.சிறுகவி ஒன்றும் சிறக்கச் செப்பான்
 அலகைத் துணைக்கொண்ட டாயினும் அருமைச்
 செயல்ஒன்று இயற்றில் தெய்வம்என்று அவனைப்
 பற்பலர் இறைஞ்சல் பாருலகு இயல்பே.
அளவாலும் முயற்சியாலும் சிறியதாக அமைந்த ஒரு பாடலைக் கூடச் செப்பமாக இயற்றத் தெரியாதவனும் ஏதாவது ஒரு பேயையாவது துணையாகக் கொண்டு ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டிவிட்டால் இவ்வுலகில் பெரும் பான்மையராகிய மக்கள் அவனைத் தெய்வமாகக் கருதிப் போற்றுவர் என்றவாறு.
கவிதை ஆற்றலும் இல்லாமல், தூய கடவுள் வழிபாடும் இல்லாமல் எப்படியாவது செப்பிடுவித்தை செய்பவரையே பெரும்பான்மையோர் மதிப்பர் என்பது கருத்து. இத்தகையோரை ஏழாமிலக்கணம், “மூடர் போற்ற முத்தமிழ்ப் புலவோர் பீடிலன் என்னப் பிழைக்குநர் பலரே”2 என இனம் காட்டுகிறது.
இந் நூற்பாவில் பாருலகு என இரு சொற்புணர்த்துக் கூறியதால் உயர்ந்தோரைச் சுட்டாமல் எண்ணிக்கையில்