| வாதத்தில் தோற்ற புலவருக்கு வென்றவர் உடல்ஊறு விளைத்தல் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபாக இருந்தது எனத் தெளிவாகிறது. இம்மரபைக் சும்மா வாயால் மட்டும் சொல்லித் திரியாமல் தாமே ஆட்படவும் துணிந்திருந்தார் என்பதனை இவர் வரலாற்றின் ஒரு நிகழ்ச்சி காட்டுகிறது. அது வருமாறு: |
|
| இவரால் இயற்றப்பட்ட சென்னை முருகன் பிள்ளைத் தமிழ் அவ்வூரில் மிகப் பெரும்புலவர்கள் கூடிய அவையில் அரங்கேற்றப்பட்டது. அந் நூலின் சப்பாணிப் பருவ ஈற்றுச் சந்தக் கவியில் “சென்னையில் வைகினை கொட்டுக சப்பாணி’ என்று வருகிறது. தய்யன என்ற சந்தத்திற்கு வைகினை என்ற சொல் ஏற்புடையதன்று எனப் புலவர் ஒருவரால் மறுக்கப்பட்டது. உடனே இவர் என் சந்தம் தவறானால் என் செவிகள் போகட்டும் என்றார். “வைகி என் சொல் சந்தம் என்னை மொழிதி என்று அம் முதியோர் கேட்டார்; கடிது தய்ய என்றேன்; அன்று என்றார்; அன்று ஆகில் முன்னாள் கலசம் ஈன்ற அடிகள் விதிப்படிபல்லோர் அநுட்டானப்படி செவிபோம் அன்றோ?“1 என இவரே தம் சுயசரிதை யாகிய குருபர தத்துவத்தில் இந் நிகழ்ச்சியைக் காட்டுகிறார். இவ்வாதத்தின் விரிவையும் முடிவையும் அந்நூல் சென்னைச் சருக்கத்தில் காணலாம். |
| “காதுகொய்தலும் காரியமன்றே” என்றகருத்து இவரால் இயற்றப் பெற்ற அருணகிரிநாதர் புராணத்தில் அவர் வில்லிபுத்தூராழ்வாருடன் வாதிட்டபின் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறுங்கால், “மன்னன்முதற் பலரும், ‘இவன் காதுகொய்தல் வழக்கு’ என்றார்; அருணகிரி வண்பேர் வாய்ந்தோன், ‘என்னபயன் கொய்ததனால்? ‘கொய்யா விட்டால் யான் கொடுத்த காதுஎனப்பேர் இருக்கும்’ என்றார்”2 என்று அருணகிரிநாதர் கூற்றாக விளக்கப்படுகிறது. (685) |
|