புலமையிலக்கணம்478
தவிர்க்க முடியாத இயற்கை நியதி. இதனைப் புலவர் உணர வேண்டும். எனவேதான் நன்னூலாரும், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுஅல; கால வகையினான”1 என்றார். இவரும் யாப்பைப்பற்றி ஓரிடத்தில், “பழையயாப்பு எனினும், பண்பு இலது ஆயிற் களையவும் புதிய கட்டே ஆயினும் இனியது ஆயின் ஏற்கவும் துணியும் கல்வி யாளர்என் கண்அனை யாரே”2 என்கிறார். இதனை இலக்கண இலக்கிய மரபு பற்றிய அனைத்திற்கும் பொதுவாகவே கொள்ளலாம்.
(693)
52.காரணம் காரியம் காணாப் புலமையைப்
 பூரணம் என்னப் புகலவொண் ணாதே.
(உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் சங்கிலித் தொடர் போலக் காரண, காரியத் தொடர்புடையவை. பல சமயங்களில் அவை எளிதில் விளங்காது எனினும்) நிகழ்ச்சிகளினுடைய காரண, காரியத்தொடர்பை அறியாவொருவரின் கல்வியாற்றலை முழுமை பெற்றதாகக் கூற முடியாது என்றவாறு.
பொதுவாக நிகழ்ச்சிகளின் பருப்பொருளான காரணங்களை அனைவரும் எளிதில் உணர்வர்; ஓரளவு நுட்பமான காரணங்களை அறிஞர்கள் அறிவர். மிகமிக நுட்பமான காரணங்களையும் அறிவதே முழுப்புலமையாகும் என்கிறார். அத்தன்மை கைகூடும்வரையில் கல்வியில் திருப்தி ஏற்பட்டு விடக்கூடாது என்பது கருத்து.
இந் நூற்பாவிற்கு வேறொரு வகையாகவும் பொருள் உரைக்கப்படும் இவ்வுலகில் உள்ள பருப்பொருள்கள் யாவும் காரியங்கள் என்றும், இவற்றின் அமைப்பிற்கான காரணங்கள் மண், நீர், காற்று, தீ, ஆகாயம் என்னும் ஐம் பூதங்களேயாம் எனவும் அறியாதவருடைய புலமையை முழுமை பெற்றதாகக் கூறமுடியாது என்றவாறு. இவ்வுரை இவருடைய “காரணமாம்