புலமையிலக்கணம்484
இழித்துக் கூறப்பட்டிருக்கலாம். அம்மொழிகள் இவர் உள்ளத்தில் அந் நூலாசிரியரின்மீது சினத்தை உண்டாக்கலாம். இதன் விளைவாகத் தம் மாணவனுக்கு அந்நூலை ஆழமாகக் கற்பிக்கமாட்டார். அந்நூலில் குற்றமுங் காண்பார். எனவே பிறசமய நூல்வழித் தமிழ் கற்பித்தால் உள்ளார்ந்த ஈடுபாடு உண்டாகாமையின் அதனை விலக்கு என்றார்.
இந்நூலாசிரியருக்குச் சமயக்காழ்ப்புணர்ச்சி சற்றும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே. ஆனால், ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த உயர்நிலை எய்துதல் மிக மிக அரிது. சிவப்பிரகாசரையும், பிள்ளைப் பெருமாளையங்காரையுமே பழித்துப் பேசும் வைணவ சைவப் பெரும்புலவர்களை இன்றும் காண்கிறோம். தமிழ்க் கல்வியில் சமயக்காழ்ப்பு புகுந்து அதனைக் கெடுத்துவிடக் கூடாது என்னும் கருத்தில் எழுந்தது இந் நூற்பா.
(700)
59.பொதுநூற் சொல்லையும் போற்றுநர் மொழியையும்
 சதுரல வேஎனச் சாற்றல்ஓர் தவறே.
எல்லோராலும் சிறப்புடையதாக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நூலின் கருத்துகளையும், அந் நூலின் சிறப்பை யெடுத்துப் பாராட்டுபவர்களின் கூற்றுகளையும் அறிவற்றவை எனக்கூறுவது பெரும் தவறாகும் என்றவாறு.
எடுத்துக்காட்டாகத் திருக்குறள் அனைவராலும் மிகச் சிறந்த அறிவு நூலாகக் காலங்காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஒரு புலவன் ஏதோ ஓர் காரணத்தால் தனக்கு அதுபிடிக்கவில்லை என்பதால் அந்நூற் கருத்துகள் தவறானவை என்றும், அதனைப் புகழ்ந்துள்ளவர்கள் அறிவிலிகள் என்றும் கூறினால் எப்படி இருக்கும்? அச்செயல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே இந் நூற்பாக் கருத்து. “உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப்படும்”1 ஆதலின் இங்ஙனம் அறிவுறுத்தப்படுகிறது.
(701)