புலமையிலக்கணம்486
முன் பதினைந்தாம் நூற்பாவில் “புகலரும் பனுவற் பொற்பணங் கருதி விற்கத் துணிவது மேம்பாடு அன்றே” என்றவர் இங்கு அதனினும் இழிந்ததாக மற்றோர் நிலையைச் சுட்டுகிறார். ஓர் அரசன், சிற்றரசன் அல்லது செல்வனையே எப்போதும் சார்ந்திருந்து அவன் விருப்பு, வெறுப்புகளையே தம்முடையவை யாக்கிக் கொண்டும், அவன் செயல்களுக் கெல்லாம் எவ்வாறேனும் நியாயம் கற்பித்துக்கொண்டும் சிலர் இருப்பர். இந் நிலையையே “சேவித்து ஒருவர்பின் செல்வார்” என்றார். இவர்களை அச் செல்வரின் உடைமைகளில் ஒன்றாகக் கூறினும் தவறாகாது. தமக்கு உணவளிப்பவனை மகிழ்விப்பது ஒன்றே இவர்களது தலையான குறிக்கோள். இவர்களுக்குப் பெரும்பாலும் விடுதலையே இல்லை.
இதற்கு மாறாகப் புலமை வியாபாரிகள் எந்நாளும் ஒரு செல்வனுக்கே ஆட்பட்டிருப்பதில்லை. தம் சரக்கிற்கு மதிப்பு இருக்கும்வரையில் ஓரிடத்தில் இருப்பர்; சற்று மதிப்புக் குறைந்தால் அங்காடியை மாற்றிவிடுவர். எனவே, இவர்களுக்குச் சற்றுப் பரந்த கண்ணோட்டமும், சுயமரியாதையும் இருக்கும். இந்நிலையில் சுதந்திரம் மிகுதி.
புலவர்களின் அடிமைநிலை, வணிகர்நிலை என்னும் இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டி அறிஞன் அடிமையாதலை விட வணிகனாக இருப்பதே மேல் என்கிறார். புலமையை விற்பது தவறுதான். எனினும், புலமையை அடிமையாக்குவதில் அதைவிடப் பெருந்தவறு என்பது கருத்து. இனிதே என்பதுலுள்ள ஏகாரத்தைக் கேடு என்ற சொல்லிற்கு மாற்றுக.
“சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம்”1 என்றதில் முதலில் வந்த இரண்டும் இவை.
(703)