அறுவகையிலக்கணம்487
62.பலவகை நயங்களும் பாராது ஒருவிதக்
 குற்றம் கருதிக் குதிப்பதும் புலமைக்கு
 இழிந்த பான்மைஎன்று இயம்பிடல் இசைவே.
ஒரு நூல் அல்லது செய்யுளில் இடம்பெற்றுள்ள பல சொல் நயம், பொருள் நயங்களைப் பொருட்படுத்தாமல் ஏதோ ஒரு குற்றத்தை நினைத்து அந் நூல் அல்லது பாடல் முற்றுமே பிழையென்று வாதிடுதல் சிறந்த அறிவுடைமைக்கு ஏற்ற செயலாகாது எனக் கூறுதல் பொருந்தும் என்றவாறு.
குற்றம் கருதி என்ற சொல்லாற்றலானே அழுக்காறு அல்லது வேறு காரணம்பற்றிக் குற்றம் கூறவேண்டும் என நினைந்து குறைகூறுஞ் செயல் பெறப்பட்டது. இச்செயல் “இலக்கணக் கவிஞர்சொல் இன்பந் தேடுவர் மலக்குசொற்றேடுவர் வன்க ணாளர்கள்”1 என முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. சிவப்பிரகாசர், “உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே”2 என்பதைச் செய்யுட்கும் கொள்ளலாம்.
(704)
63.தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதுஎனில்
 வெகுளியற்று இருப்போன் வெறும்புல வோனே.
தமிழைவிட எல்லாவகையாலும் சிறப்புப்பெற்றதாகிய வேறு ஒரு மொழி இவ்வுலகத்திலே இருக்கிறது என யாராவது ஒருவர் கூறக்கேட்டும் சற்றும் சினங்கொள்ளாமல் ஒரு புலவன் இருப்பின் அவன் பெயரளவில் புலவனே அன்றி உண்மையில் வெறும் சதைப்பிண்டமே என்றவாறு.
இந் நூலாசிரியர் தமிழைத் தம் வழிபடு கடவுளாகிய முருகப் பெருமானின் அருள்வடிவமாகவே போற்றுபவர். “தமிழின் 18 மெய்யெழுத்துகள் அக்கடவுளின் கண்கள்; 12 உயிரெழுத்துகள் அவன் தோள்கள்; ஆய்த எழுத்து அவன் வேலாயுதம்; நாள், மலர், தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்