அறுவகையிலக்கணம்489
இவர் முற்கூறிய தமிழங்காரத்தில், “தமிழ்உணர் பாவலன் போல்வான் ஒருவன் தனதுகலை அமிழ்தினும் ஏற்றம்என்று ஏமாப்பு உறாமல் அயற்கலையால் உமிழ்வதுஎன்று ஒப்பிடில் மற்றோர் மடந்தைக்கு உரியகொண்கற் குமிழ்மலர் நாசியினால்மணந் தாள்நிகர் கோதினனே”1 என்கிறார். இந் நூற்பாவில் “வெறும் புலவோன்” என்றதே அங்கு “தமிழ்உணர் பாவலன் போல்வான் ஒருவன்” எனக் கூறப்பட்டது.
64.எண்ணப் படும்அவற்று எவ்வகைக் கவிகளும்
 வண்ணக் கவிபொரு மாண்பினது அன்றுஎன்று
 இசையார் புலமைக்கு இழுக்கு மிகுமே.
சிறந்த யாப்பாகக் கருதப்படும் அனைத்துவகைக் கவியினும் எண்வகைச் சந்தக் குழிப்பிற் கமையப் பாடப் படுகின்றவண்ணக் கவியே மிக உயர்வானது என ஒப்புக்கொள்ளாதவர்களின் அறிவுத்திறமை குறையுடையதாகக் கருதப்படும் என்றவாறு.
பொருள்தெளிவு கருதிப் பொழிப்புரை இம்முறையில் கூறப்பட்டது. வண்ணக்கவி பற்றிய இவருடைய கருத்துகள் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. இவருடைய வண்ணத்தியல்பு என்னும் இலக்கண நூலின் பதிப்புரையில் அவை விரிவாகத் தொகுத்து ஆராயப்பெறும்.
(706)
65.மற்றோர் புலவன் வாய்த்தமிழ் மனத்திற்கு
 இனித்தும் அவன்எதிர் இகழும் பொல்லான்
 கொடுமையைத் தெய்வம் குறிக்கும் அன்றே.
ஒருவனின் இலக்கியப்படைப்பு தம் உள்ளத்திற்குப் பிடித்ததாக இருந்தும் அப்படைப்பாளிக்குப் பெருமை சேர்ந்துவிடுமே என்ற அழுக்காறு அல்லது வேறு சில காரணங்களால் அப்படைப்பைக் குறை கூறுகின்ற தீய குணம் படைத்தவர்களின் பொல்லாங்கை உடனே தெய்வம் குறித்துவைத்துக் கொள்ளும் என்றவாறு.