புலமையிலக்கணம்490
குறை கூறுபவனின் உள்ளமும் உரையும் தம்முள் மாறுபடுதலின் அவர் பொல்லார் எனவும், அவர்செயல் கொடுமையானது எனவும் கூறப்பட்டது. அவர்செயல் சத்தியத்திற்கு மாறுபட்டதாதலின் செய்யும் நாளிலேயே அது தெய்வத்தால் குறித்துக் கொள்ளப்படும் என்கிறார். கூறவே இதனால் தெய்வதண்டனை நேரும் என்பது பெறப்பட்டது.
(707)
66.பொருட்குவை குலத்துஉயர்வு அரசு பூண்உடை
 பட்டம் ஆதிய பற்றிப் புலமைக்கு
 உயர்ச்சி கூறலும் ஒவ்வா முறையே.
ஒருவன் பெற்றுள்ள செல்வவளம், தோன்றிய குடும்பத்தின் சிறப்பு, வசிக்கும் அதிகாரமுள்ள பதவி, அணிந்துள்ள ஆடையணிகளின் ஆடம்பரம், பெற்றுள்ள விருதுகள் முதலியனவற்றில் ஒன்றையோ அல்லதுசிலவற்றையே மட்டுங்கருதி அவனுடைய புலமையைத் தகுதியற்றபோதும் புகழ்ந்துரைத்தல் உண்மைப் புலவனுக்குப் பொருந்தாத செயலாம் என்றவாறு.
முதல் நூற்பாவில் சிறந்த புலமை பழிக்கப்படுவதைத் தவறு என எடுத்துக்காட்டியவர் இதில் இழிந்த புலமை வேறு பற்பல காரணம் பற்றி வானளாவப் புகழப்படுவதையும் விளக்குகிறார். பூண்உடை உம்மைத்தொகை. இந் நிகழ்ச்சியை நாடோறும் கண்டுவருலின் விரித்தல் மிகை.
“விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்; விரல்நியை மோதிரங்கள் வேண்டும்; அரையதனில்பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று” என்னும் பழம்பாடல் இங்கு நினைவுகூரத் தக்கது.
67.கோங்குஅரும்பு அன்ன குவிமுலைக் கோதையர்
 தீஞ்சுவைச் சொல்லினும் செந்தமிழ் இனிதுஎன
 மனமும் தெய்வமும் அறிய வாழ்த்தும்
 புலவர்க்கு ஆகா தனஎலாம் புலமைக்கு
 உதவா தனஎன்று உணர்வது முறையே.