அறுவகையிலக்கணம்491
செம்மையான தமிழ்மொழியைக் கோங்கரும்பைப் போன்ற அழகிய நகில்களைப் பெற்ற மங்கையரின் கொஞ்சுமொழிகளை விட இனியதாகச் சில மெய்யறிஞர் தம் மனச்சாட்சியும் கடவுளும் அறியப் போற்றுவர். அத்தகையோருக்கு எவையெவை ஆகாதனவோ அவையனைத்தும் நற்புலமைக்கும் ஏலாதன ஆகும். இந்த அடிப்படையிலேயே ஒவ்வொன்றையும் இது புலமைக்குத் தக்கதா அன்றா என முடிவு செய்யவேண்டும் என்றவாறு.
நகிற்குறிப்பால் மங்கைப் பருவமும், தீஞ்சுவைச் சொல் என்றதால் கொஞ்சுமொழியும் பெறப்பட்டன. அரசியல் ஆதாயம், பொருள் வருவாய், எளிதில் செல்வாக்கடைதல் முதலியன கருதிப் போலியாகத் தம் தமிழ்ப்பற்றை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ளும் காரியவாதிகளினின்றும் சத்தியமான தமிழன்பர்களைப் பிரித்துக் காட்ட “மனமும் தெய்வமும் அறிய வாழ்த்தும் புலவர்” என்றார்.
புலமை என்பது இத்தன்மைத்து இவ்வளவினது எனத்தூலமாகச் கூற இயலாதவாறு புலவர்களைச் சார்ந்தே அறியப்படுதலின் அவர்களுக்கு ஆகாதன யாவும் புலமைக்கும் ஆகாதன ஆயிற்று. தமிழ் இனிமைக்கு இவர் இதே உவமையை வேறோர் இடத்தில், “சிமிழலங்கார முலையார் மொழியினும் தித்திப்பதாம் தமிழ்”1 என்றார்.
(709)
68.புலமையிற் கரவுதீர் நலம்பு கன்றனம்;
 மரபியல்பு அதனையும் வகுக்குதும் அன்றே.
புலமையில் எந்தெந்தத் தீமைகள் களையப்பட்டுச் சிறப்பு உண்டாக வேண்டும் என இதுவரை கூறினாம். இனி அடுத்து மரபியல்பையும் வகுத்துச் சொல்வாம் என்றவாறு.
குற்றங்களைக் காட்டிக் குறைகூறுவது தம் நோக்கமன்று என்பதைக் தெளிவு படுத்துவதற்காக இவ் வியல்பின் முதலில் ‘சாராது ஒழிப்பான் தவறு இயல்பு உரைக்குதும்” எனவும் இங்குக் “கரவுதீர் நலம்” என்றும் கூறினார்.