இறைவனும் அறிவு வடிவானவனே எனும் உண்மையை உணரும் பெரியவர்கள் தம் சிறப்பில் இணையற்றவர் ஆவர் என்றவாறு. |
இறைவன் முற்றறிவன் அல்லது அறிவுமயமானவன் என்பது அனைத்துச் சமயங்களும் ஏற்றுச் கொள்ளும் உண்மையாகும். வாலறிவன் என்றார் வள்ளுவரும். (711) |
70. | பாணனும் தருமியும் பெத்தானும் உய்யப் | | பாடியது அன்றிப் பைந்தமிழ்க் கழகத் | | தலைவனைப் பழித்தும் தனிக்கவி பகர்ந்த | | பரமனும் புலவன் என்பது பண்பே. |
|
பாணபத்திரருக்காக “மதிமலி புரிசை” என்னும் திருமுகப் பாசுரத்தையும், தருமிக்காகக் “கொங்குதேர் வாழ்க்கை” என்ற அகவற் பாவையும், பெத்தான் சாம்பானுக்காக “அடியார்க் கெளியன்” எனத்தொடங்கும் வெண்பாவையும், நக்கீரனை இகழ்வதாக, “அங்கம் குலுங்க” என்னும் ஒரு வெண்பாவையும் பாடியதால் சிவபெருமானையும் ஒரு தமிழ்ப்புலவர் என்பதே முறையாகும் என்றவாறு. |
இவ் வரலாறுகள் திருவிளையாடற் புராணம், புலவர் புராணம் ஆகியவற்றுள் உள்ளன. சிவபெருமானும் தமிழ்ப் புலவனே என்னும் இதே கருத்து இவரால் வேறிடத்தே “அரன்முனாள் தருமி பாணன் அன்புறு பெத்தான் கீரன் தரம்உலகு அறியப் பாடித் தமிழ்க்கவிப் புலவன் ஆனான்”1 எனக் கூறப்பட்டுள்ளது. (712) |
71. | கண்டா யோஎன மீனவற் கருதிப் | | பாடிஓர் தொண்டன் பருவரல் ஒழித்த | | பனிவரைக் குமரியும் பாவலி யினளே. |
|
பாண்டியனிடம் செல்லு ஓர் இரவலனுக்காக உமாதேவியாரும் “கண்டாயோ மீனவா” என்ற பாடலை இயற்றியதால் புலவருள் ஒருத்தி ஆனாள் என்றவாறு. |
|