புலமையிலக்கணம்526
125,அளப்பரும் பனுவல் அகண்டம் ஆய
 நாத சத்தியின் நனந்தலை கிடந்து
 பகர்வார் வரவு பார்க்கின் றனஎனப்
 பெரியோர் பற்பலர் பேசினர் அன்றே,
இதுவரையில் தமிழில் இயற்றப்பெற்ற கணக்கற்ற சிறந்த நூல்கள் பகுக்கப்பட முடியாததாகிய நாத தத்துவத்தின் நடுவில் தங்கியிருந்து எவரேனும் தம்மை மறுபடியும் வெளிப்படுத்துவர் என எதிர்நோக்கி உள்ளன என்பதாகப் பல சான்றோர்கள் கூறியுள்ளனர் என்றவாறு,
பழைய தமிழ உரைகளாலும் இலக்கியங்களாலும் எத்தனையோ தமிழ் நூல்கள் அழிந்துவிட்டன என அறிவதோடு அவற்றில் பலவற்றின் பெயர்களையும், சிலவற்றின் சிறு சிறு பகுதிகளையும் அறிகிறோம், இவ்வாறு அறியப்படாமல் போன நூல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம். அவையாவும் அழியவில்லை, பரவெளியில் நாத தத்துவத்தில் உள்ளன, முயல்வார் முயலின் இறையருளால் வெளிப்படும் என்கிறார்,
இவ்வாறு மறைந்த நூல்களைப்பற்றி அடுத்த நான்கு நூற்பாக்கள் கூறுகின்றன,
(767)
126,தில்லைக் கோயிற் றிருமதிற் செல்லால்
 சொல்லைமிக்கு இழந்துள தூய பாடல்
 கறைமிடற்று அண்ணல் கழறக் கேட்டுஅவண்
 நிறைவுஉறச் செய்தல் நீதி அன்றுஎனப்
 பகர்வார் சைவருள் பதராம் அன்றே,
சிதம்பரத்துக் கோயிலில் தேவாரச் சுவடிகள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட கறையான் அரிப்பால் பெரும்பகுதியை இழந்துவிட்டுள்ள புனிதமான தேவாரப் பாடல்களில் இப்போது கிடைக்காதனவற்றை எல்லாம் சிவபெருமானிடம் இறைஞ்சிக் கேட்டு அவர்வழியாகப் பெறமுயலல் முறையாகாது எனக் கூறுவார் சைவருள் இழிந்தவரே என்றவாறு,