இதுவுமது
   
57. மற்றது வானவர் வாழ்த்துக் கடைவாழ்த்துப் பாலைநிலப்
பெற்றி 1பிறைமுடி சூடிறை யோன்பெருந் தேவிமகிழ்ந்
துற்றுறை கோயி லவளை யுரைத்தல் அலகைக்குழாம்
சுற்றிய வண்ண மவைதம் பசியைப்பின் சொல்லுதலே.

     (உரை I).
எ - ன், அந்தப் பரணியாவது வானவர் வாழ்த்தும்,
கடை வாழ்த்தும், பாலைநிலத்துப் பண்பும், பிறைமுடியவன்றன்
பெருந்தேவி யிருந்த கோயின்மரபும், அவளது தன்மையும், அவளைப்
பேய்க்குழாம் சூழ்ந்ததும், அவைகள் தம் பசியுணர்த்துதலும் எ - று.

     (உரை II). (மூலமும் உரையும்)

“மற்றது நால்வகைப் பெண்கள் வரிசை கடைதிறப்புப்
பெற்றிய பாலை வனத்தின் குறிப்புப் பிறைமுடிசூழ்
உற்றவள் கோயி லவளைப் பணிந்த வலகைக்குழாம்
சுற்றிய வண்ண மவைதம் பசிப்பினைச் சொல்லுதலே.”

     எ - து, முன்சொன்ன பரணியென்னும் பிரபந்தம் பாடுமாறு:
வானர மகளிரும், வரையர மகளிரும், திரையர மகளிரும், செழுநில
மகளிருமாகிய நால்வகைப் பெண்கள் வரிசையும் ஊடலும்
கடைதிறப்பும் தீர்த்தக் கரைகளும் தெய்வலோகத்தியற்கையும் பாடி,
பாலைநிலமும் பாலைநிலத்தின் குறிகளும் பாடி, அதற்குத்
தலைவியாகிய பத்திரகாளி கோயில் அலங்காரமும்
பேய்க்கணங்கள் கூட்டமும் அவைகளின் வளமையும் பத்திரகாளி
முதலாயின பூத கணங்களும் பேய்க்கூட்டமும் உணவு விரும்பலும்
மேற்கோளும் பாடுவது எ - று.

     (கு - ரை.) வான் அரமகளிர்.

     (பி - ம்.) 1 ‘பெருங்கா னகமிறை’ (32)