இதுவுமது
   
58. ஆங்குக் கனாத்துன் னிமித்தம் வகையறி வித்திடவே
பாங்கிற் 1பணிமொழி பைம்பொன் முடிமன்னர்
                                 தம்பகையார்
தீங்கிற் செருச்செய் தொருவன் றிறல்வாகை
                              சென்னிவைத்தல்
2ஈங்குற் றிடவே றொருபே யுவகை இசைத்திடலே.

     (உரை I).எ - ன், அந்நிலைக்கண் கனாத் துன்னிமித்தம்,
பகைக்களம் கண்டபடி வந்து (ஒரு பேய்) கூற, நாயகியும் அது
கூறக்கேட்டு இருவர் அரசர் தம்மில் தோன்றிய பகையினால்
செருச்செய்து ஆனை தேர் குதிரை கருவி காலாள் அனைத்தும் பட
அவர்களில் ஒருவன் வெற்றி வாகை சூடு தலைச் செப்பும் எனாக்
கனாவிடுத்திருக்கும் அளவின்கண் வேறோரு பேய் உவகை கூறி
வருதலும் உண்டு எ - று.

     (உரை II).
எ - து, பாலை நிலத்துக்கு அதிபதியாகிய
சாமுண்டி பத்திர காளியைச் சூழ்ந்திருக்கப்பட்ட பரிகலமாகிய
பேய்க்கூட்டத்தில்ஒரு பேய், ‘உறக்கத்திற் கனவு கண்டேன்’ என்று
அந்தக் கனவைத் தன்னுடைய பக்கத்தில் இருக்கிற
பேய்க்கூட்டத்துக்குச் சொல்லுவதாக வினை முந்திய கனவென்று
சொன்னவாறு.

     “இருவர் மன்னர் தங்களில் மாறுபாடாகிச் சமரபூமியில் ஆனை
குதிரை தேர் காலாட்படைக் கூட்டத்துடனே எதிர்ந்து, வில் வாள்
தோமரம் முடாகம் பிண்டி பாலம் முசலம் தழற்றட்டை விட்டேறு
சக்கரம் நாராசம் தண்டம் சூலம்மழுகற்கடம் என்று சொல்லப்பட்ட
தொண்ணூற்றெட்டு ஆயுதமும் எடுத்து ஒருவருக்கொருவர் மோதி
உயுத்தம் பண்ணி, முடிமன்னரும் யானையும் குதிரையும் பதாதியும்
பட்டு அந்த நிண மூளையும் தசையும் இரத்தமும் கலந்த
பொருகளத்தி்லே, பாறும் கழுகும் காகமும் நாயும் நரியும்
பேயும் பூதமும் இவையெல்லாம் கூடி நிணச் சதைகளைத் தின்று
களிக்கவும் வீரமகள் விரும்பிச் சமர பூமியிலே வந்து தோன்றவும்
இப்படிக் கனவு கண்டேன்” என்று கண்ட பேய் சொல்லக்கேட்ட
பேய்க்கணங்கள் களிப்ப (வேறொரு பேய்) தோன்றிற்று.

     (கு - ரை.)
வினை முந்திய கனவு : “வினாமுந் துறாத
வுரையில்லை யில்லை, கனாமுந் துறாத வினை” (பழ.2) (33)

(பி - ம்.) 1 ‘பனிமொழி பொன்முடி மன்னவர்’ 2 ‘ஈங்கிற் சிலவே’