பக்கம் எண் :

6. தேவியைப் பாடியது 37

213.

யாவ கைப்பல வுயிர்த்தொகுதி கண்டுபரவ
      எழுத ரும்பழ மறைப்பொருள் குறித்தபடியே
மூவ கைப்படிவ மாகியழி யாதவொளியாம்
      மூல மாகிய முதற்பொருள் பரிந்தபரிசும்.

(43)
   

214.

வெண்ணி லாவொளி துளும்புகயி லைக்கிரியின்மேல்
      விழிகி ழித்தநுத லுங்கரிய கந்தரமுமாய்
அண்ண லாரினித மர்ந்தருளி வாசமலரோன்
      ஆதி யர்க்கற மலர்ந்தருள் சுரந்தபரிசும்.

(44)
  

215.

பரிதி வானவ னுடைத்திட வுடைந்ததிமிரப்
      படல மொத்திருள் பரந்திரிய வாலநிழலிற்
சரியை நேர்கிரியை யோகமொடு ஞானமுழுதும்
      சனக ராதியர் தமக்கருள் சுரந்தபரிசும்.

(45)
   

216.

முன்ப ராபர வுருத்தனில் விகாரமிலராய்
      முற்று ணர்ந்துருகி மும்மல விரோதமகலும்
அன்ப ரானவர் நினைத்திடு முருக்கொடுபுகுந்
      தவர வர்க்குள மகிழ்ந்தருள் சுரந்தபரிசும்.

(46)
   

217.

காடெ லாம்வரி நெடுங்கண்மயில் பின்புதொடரக்
      கைச்ச ரம்பொருத பன்றியொடு முன்புதொடரும்
வேட வேடமு னெடுத்தருளி யன்றுபொருபோர்
      விசயன் மெய்த்தவ முடிப்பவருள் வைத்தவிரகும்.

(47)

213. “ஆதி மூலமொரு கோலமுமி லாதவடிவில் வகில லோகமு மறிந்தடையும் வண்ணமழகார், சோதி மூவடிவு கொண்டருளி யந்தமறை முன் சொன்ன தன்மைதெரி யும்பரிசு சொன்னதுணிவும்” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘ஏவகை’

214. கந்தரம் - கழுத்து.

“கயிலை மாமலையின் மேலினிதி ருந்தருளியக் கமல யோனிமுத லெக் கடவு ளர்க்குமருளான், மயிலை யேறிவரு மைந்தனுட னந்திமுதலா மற்றும் வந்தடைப வர்க்குமருள் செய்தவகையும்” அஞ்ஞவதைப்.

215. பரிதிவானவன் - சூரியன். திமிரப் படலம் - இருட் பரப்பு. இருள் - அஞ்ஞானம்.

216. “தன்ப ராபரம தானதிரு மேனிநிலையிற் சனன மின்றியொரு தன்மையினி னின்றருளியே, அன்ப ரானவர்க ணெஞ்சினி லுவந்தவடிவா யங்கு வந்தவர்க ளுய்யும்வகை செய்த வருளும்” அஞ்ஞவதைப்.

217. மயில் - உமாதேவியார். விரகு - தந்திரம்.