பக்கம் எண் :

மூலமும் உரையும்137

வித்துவகை
சிந்து
இராகம்: மத்தியமாவதி. தாளம்: ஆதி.

108. சித்திரக் காலிவாலான் சிறைமீட்டான் மணல்வாரி
      செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா
முத்து விளங்கிமலை முண்டன்பொற் பாளைநெடு
      மூக்கன் அரிக்கிராவி மூங்கிற் சம்பா
கத்தூரி வாணன் காடைக் கழுத்தன் இரங்கல்மீட்டான்
      கல்லுண்டை பூம்பாளைபாற்கடுக்கன்வெள்ளை
புத்தன் கருங்குறுவை புனுகுச் சம்பாவும்இரு
      பூவுக்கும் விதைசேரிற் போட்டே னாண்டே.

(இ - ள்.) சித்திரக் காலியும், வாலான் நெல்லும், சிறைமீட்டானும், மணல் வாரியும், செஞ்சம்பாவும், கருஞ்சூரையும், சீரகச் சம்பாவும், முத்துச்சம்பாவும், விளங்கி நெல்லும், மலைமுண்டனும், பொற்பாளையும், நெடுமூக்கனும், அரிக்கிராவியும், மூங்கிற் சம்பாவும், கத்தூரிச்சம்பாவும், வாணன் நெல்லும், காடைக் கழுத்தனும், இரங்கல் மீட்டானும், கல்லுண்டையும், பூம்பாளையும், கடுக்கன்சம்பாவும், வெள்ளைச்சம்பாவும், புத்த நெல்லும், கறுங்குறுவையும், புனுகுச் சம்பாவுமாகிய இவ்வளவு நெல்வகைகளும் இரண்டு பூவுக்குங் காணுமளவு விதை சேரிற் போட்டேன் நயினாரே; (எ-று. )

(வி - ம். ) இயற்கைப் பொருள்களுடன் ஒப்பித்து நெல்லுக்குப் பெயர் வைத்திருக்கும் அரிய தமிழ்த் திறனை இதிற் காணலாம். காடையின் கழுத்திலுள்ள நிறம்போன்று நிறமுள்ள நெல்லுக்குக் காடைக்கழுத்தன் என்றும், ஊசி போன்று வால் நீண்டிருக்கும் நெல்லுக்கு வாலான் என்றும், மூக்குண்ட நெல்லுக்கு மூக்கன் என்றும் பெயர் வைத்தனர். மற்றவையும் இவ்வாறே காண்க.

“மணல்வாரி சன்னசம்பா” “முத்து விளங்கி மலை மீண்டான்” “கத்தூரி வருணன்” “இறங்கல் மீட்டான்” “இருபோகத்துக்கும் விரைசேரில் போட்டேனாண்டே” என்பனவும் பாடவேறுபாடுகள்.

(108)