பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்195

கொள்ளாமல் அதன் ஆகுபெயர்ப் பொருளாய புலவரைக் கொண்டது.

நிலம் என்பது தலைச்சங்கப் புலவர் இருந்த நிலம். அது கடலால் கொள்ளப்பட்ட தென்மதுரைக்கண் உள்ள கல்விக் கழகம். தலைச் சங்கம் இருந்து தமிழாராய்ந்த காலத்து இறுதியில் பாண்டியன் மாகீர்த்தி என்பானது காலத்து அம்மதுரையின் வீற்றிருந்து இவ்ஆசிரியர் நூல் செய்தார் ஆகலின் நிலத்தொடு முந்துநூல் கண்டு என்றார். நக்கீரனார் அடியார்க்குநல்லார் நச்சினார்க்கினியார் இவர் உரைகளான் இந்நூல் தலைச்சங்கத்து இறுதியில் செய்யப்பட்டு இடைச்சங்கத்து ஆதிக்காலம் தொட்டு வழங்கிற்று எனல் அறியப்படும். நிலம் ஆகுபெயராகித் தென்மதுரைக் கழகத்து இருந்த ஆசிரியர் அகத்தியனார் முதலாய தலைச்சங்கப் புலவரை உணர்த்திற்று.

நிலத்தொடு என்பதன்கண் ஒடு உருபு, அதனொடு இயைந்த ஒருவினைக் கிளவியாகிய கண்டு என்னும் வினைகொண்டது.

ஆசிரியர் அகத்தியனாரிடத்துக் கற்று ஏனைப் புலவரொடு பயின்று முந்துநூலை ஐயமும் மருட்கையும் அற உணர்ந்து புலமை நிரம்பினான் என்பது விளங்க நிலத்தொடு கண்டு என்றார். என்னை, முக்கால் கேட்பின் எனவும் அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் எனவும், அவ்வினையாளரொடு பயில்வகையானும் உரைத்தலானும் புலமை மாண்புடைத்தாம் எனவும் கூறினார் ஆகலின் என்பது.

இனிச் செந்தமிழியற்கை சிவணிய நிலம் என்பது, வேங்கட மலையையும் குமரிமலையையும் எல்லையாக உடைய தமிழ் நாடெல்லாம் குறியாது, தென்மதுரையிடத்துத் தலைச்சங்கப் புலவர் இருந்த கல்விக் கழகத்தை உணர்த்துமாறு என்னை எனின்; நாட்டினுள் கற்றாரும் கல்லாரும் இருத்தலின் அது செந்தமிழது திரிபும் சிவணுதல் ஒருதலையாகலின் செந்தமிழியற்கை சிவணிய என்னும் அடை அந்நாட்டை இனம்சுட்டி விலக்கிச் செந்தமிழது திரிபு சிவணாமல் அதன் இயற்கையே சிவணிய சங்கமிரீஇய நிலத்தினை உணர்த்தல் வழக்காறாம் என்பது.

முந்துநூல் எனப் பொதுப்படக் கூறினமையானே, ஆதிநூலாகிய இசைநுணுக்கமும் அகத்தியமும் அதற்கு இணை நூலாகிய தேவ இருடி நாரதன் முதலியோர் செய்த நூல்களும் என இத்தொடக்கத்த