மழைக்குறி கொச்சகக் கலிப்பா | 34. | முத்திதர வந்ததிரு முக்கூடல் மாதவர்தாட் பத்திமற வாதபண்ணைப் பட்சேரிப் பள்ளரெல்லாம் புத்தியுடன் தெய்வநிலை போற்றியபின் வானமுகில் எத்திசையும் பெய்யமழை யின்குறியுண் டாகியதே. |
(இ - ள்.) உயிர்களுக்கு முத்தி கொடுக்கும் பொருட்டுத் தோன்றியருளி வந்த திருமுக்கூடலிலிருக்குந் திருமகள் தலைவனாகிய திருமாலின் திருவடிமேல் வைத்த பற்று மறவாத பண்ணையைச் சார்ந்த பள்ளர்களெல்லாம் அறிவுடன் தெய்வநிலை போற்றிய பின்பு வானத்திலியங்கும் மேகம் எல்லாத் திசையிலும் மழையைப்பொழிய இனிய அறிகுறி உண்டாகியது; (எ-று. ) (வி - ம். ) மாதவர்-திருமகள் தலைவன். ‘மாலழகர் பத்தி மறவாத’ என்றும் ‘வாழ் முகிலே’ என்றும், ‘பெய்ய மழையெனக்குறி’ என்றும் பாடங்கள் உண்டு. (34) சிந்து இராகம்: ஆனந்தபைரவி. தாளம்: அடதாளம். | 35. | ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி- மலை யாள மின்னல் ஈழமின்னல் சூழமின்னுதே நேற்று மின்றுங் கொம்புசுற்றிக் காற்ற டிக்குதே-கேணி நீர்ப்படு சொறித்த வளை கூப்பிடு குதே சேற்று நண்டு சேற்றில்வளை ஏற்றடைக்கு தே-மழை தேடியொரு கோடி வானம் பாடி யாடுதே |
|